fbpx
Others

தயாநிதிஎம்பி–யானைகவுனி மேம்பால சீரமைப்புமுக்கிய பிரச்னை

* மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க ரயில்வே பொது மேலாளருக்கு மனமில்லை
* ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி., குற்றச்சாட்டு
தெற்கு ரயில்வேயின் முக்கிய பிரச்னையான, யானைகவுனி மேம்பால சீரமைப்பு பணிகளுக்கு நேரம் ஒதுக்க ரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டுவது ஏன் என்றும், மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க ரயில்வே பொது மேலாளருக்கு மனமில்லை என்றும் ஆலோசனை கூட்டத்தில் தயாநிதி மாறன் எம்பி குற்றம்சாட்டி பேசினார். சென்னை ரயில்வே கோட்டத்தில், புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம், சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:
யானைகவுனி மேம்பாலம் சீரமைக்கும் பணிகளில் ஏற்படும் தாமதத்தினால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெற்கு ரயில்வே மேலாளரை நேரில் சந்திக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், அவருக்கு, மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க நேரமில்லையா, மனமில்லையா என்று தெரியவில்லை.நாங்கள் நேரம் கேட்பது, மக்கள் பிரச்னைகளை உங்களிடம் எடுத்து சொல்லவே தவிர, எங்களது சொந்த பிரச்னையை பற்றி பேச அல்ல. இரு முறை ஒன்றிய அமைச்சர் பொறுப்பு வகித்து, தற்போது 3வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றுபவருக்கே இந்த நிலைமை என்றால், முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைமையை நினைத்தால் வருத்தமளிக்கிறது. யானைகவுனி மேம்பால பிரச்னை தொடர்பாக, பலமுறை உங்கள் அலுவலகத்துக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை, நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.  நாங்கள், எப்போது இந்த பிரச்னையை எழுப்பினாலும், இரண்டு மாதத்தில் இந்த பணிகள் நிறைவு பெறும் என ஒரு பொதுவான பதிலை கூறுகிறீர்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்கள் இப்பிரச்னை பற்றி தெற்கு ரயில்வேயின் கவனத்துக்கு கொண்டு வந்தார்கள். தமிழ்நாடு அரசு இப்பணிகளை விரைந்து முடிக்க அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளது. ஆனாலும், இப்பிரச்னையை எங்களுடன் நேரில் கலந்தாலோசனை செய்வதற்கு பொது மேலாளருக்கு நேரமில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது.   மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் தெற்கு ரயில்வே மக்களின் முக்கிய பிரச்னையான யானைகவுனி மேம்பால சீரமைப்பு பணிகளுக்கு நேரம் ஒதுக்குவதற்கு தயக்கம் காட்டுவது ஏன் என்று புரியவில்லை. நாங்கள் கோரிக்கை வைத்த பிறகு, தெற்கு ரயில்வேயில் இதுவரை 3 பொது மேலாளர்கள் மாறியுள்ளனர். ஆனால், நாங்கள் சுட்டி காட்டிய பிரச்னைகள் இன்னும் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றன. யானைகவுனி மேம்பாலமானது வடசென்னை மற்றும் மத்திய சென்னையை இணைக்கும் ஒரு முக்கிய வழித்தடம். இந்த பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும். மாம்பலம், சேத்துப்பட்டு, கடற்கரை, பார்க் டவுன், சூளைமேடு ரயில் நிலையங்களில் பேட்டரி வாகனங்கள் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லை. எழும்பூர் ரயில் நிலையத்தில், அடுக்குமாடி வசதி கொண்ட பல்நோக்கு கார் பார்க்கிங் அமைக்க வேண்டும்.   கொரோனா தொற்று காலத்தில் மூடப்பட்ட பல முன்பதிவு கவுன்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தடுக்க இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்களுடன் கூடிய நடைமேம்பாலங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாடியில் நடந்த மேம்பால பணிகளை காரணம் காட்டி, அப்பணிகள் முடிவடைந்த பின்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறி மூடப்பட்ட அண்ணாநகர் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் விரிவான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும். ரயில் நிலையங்களில் பெண் பாதுகாப்பு பணியாளர்களின் இருப்பை அதிகரிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறையாவது புகார்கள் தெரிவிக்கவும், பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்கு முறையான அமைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் நிலுவைத் தொகை சரியான நேரத்தில் வழங்கப்பட வேண்டும். இந்த பிரச்னைகளை தவிர தெற்கு ரயில்வே பல்வேறு நினைவூட்டல்களுக்கு பிறகும், மக்கள் பிரதிநிதிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்கும், புகார்களுக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்காமல் வெறும் வாய்மொழியாக மட்டுமே உறுதி அளிக்கிறது. தெற்கு ரயில்வேயால் நடத்தப்படும் நிகழ்வுகள் அல்லது ஆய்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முறையாக அழைக்கப்படுவதில்லை. அல்லது இந்த நிகழ்வுகளில் அவர்களுக்கு உரிய நெறிமுறைகள் வழங்கப்படவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close