தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில்30 பேர் பங்கேற்கவில்லை….?
காங்கிரஸ்.. நம் நாட்டின் மிகவும் பழமையான அரசியல் கட்சியாக உள்ளது. அதோடு கோஷ்டி பூசல் மற்றும் கோஷ்டி அரசியலுக்கு புகழ்பெற்ற கட்சியாக அறியப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு தலைவர்கள் கோஷ்டி சேர்த்து அரசியல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு தரப்பினர் வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேவேளையில் இளம் தலைவர்களாக உள்ளவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விஜயின் தவெக உடன் சேர்த்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இதில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், கரூர் எம்பி ஜோதிமணி உள்பட இன்னும் பலர் அடங்குவர். குறிப்பாக மாணிக்கம் தாகூர் திமுக ஐடி விங்க்கை கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல் திமுகவினரும், தவெக கூட்டணியை விரும்பும் காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக சாடி வருகின்றனர். இதற்கிடையே தான் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை டெல்லிக்கு அழைத்து கடந்த 17 ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கருத்து கேட்டனர்.அப்போது ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை கட்சி தலைமையிடம் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டணி குறித்து பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது. கூட்டணி விஷயத்தை மேலிடம் பார்த்து கொள்ளும். அதுவரை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தியது. மேலும் காங்கிரஸ் மேலிடம், திமுக கூட்டணியில் தொடர விரும்புவதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் 90 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 60 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. 30 பேர் பங்கேற்கவில்லை. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கேஎஸ் அழகிரி, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டவர்கள் அடங்குவர்.இதில் மாணிக்கம் தாகூருக்கும், திமுகவினருக்கும் இடையே வலைதளத்தில் சண்டை நடந்து வருகிறது. அவர் தவெக கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. அதேபோல் கரூர் எம்பி ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்திருந்தார். இதனால் அவர்கள் அதிருப்தியில் கூட்டத்தை புறக்கணித்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதோடு தமிழக காங்கிரஸ் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்பதை அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கரிடம் சொல்லி விடுப்பு எடுத்து இருக்கிறேன். உண்மையானகாங்கிரஸ்காரன்’’ என்று கூறியுள்ளார். அதேபோல் ஜோதிமணி எம்பி, ‛‛நான் இடம்பெற்றுள்ள பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கல்வி பயணத்திற்கான பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில் கலந்து கொண்டுள்ளேன். அதுபோல் கலந்து கொள்ள முடியாத ஒவ்வொருவருக்கும் ஏதாவதுஒரு காரணம் இருக்கும்.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தேர்தலை எதிர்கொள்ள சரியான திட்டமிடலுடன் தயாராகி வருகிறது. நாங்கள் அனைவரும் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை திறம்பட செய்வோம். ஆகவே உங்கள் கற்பனை குதிரையை வேறு பக்கம் தட்டி விடுங்கள்!’’ என்று கூறியுள்ளார்.