fbpx
Others

டெல்லியின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியது..,600 ரயில்கள் ரத்து..

. கடந்த இரண்டு நாட்களாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், டெல்லி நகரமே நீரில் மூழ்கியுள்ளது. இன்று காலை வரை நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்திருந்தது. ராஜ்காட் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஐடிஓ ரோடு, சுப்ரீம் கோர்ட் அருகேயும் இதேபோன்ற நிலை காணப்படுகிறது. செங்கோட்டை அருகே அங்கூரி பாக் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகள், சுகாதார நிலையங்கள், தகனம் செய்யும் இடங்கள், தங்குமிடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், தலைநகர் டெல்லியின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.   இந்த வெள்ளத்திற்கு மத்தியில், வஜிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எஸ்எம்எஸ், விளம்பரங்கள், பிற வழிகளில் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) வெளியிட்ட அறிக்கையில், இறந்தோரை தகனம் செய்ய நிகம்போத் காட் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கீதா காலனியில் உள்ள தகன மைதானமும் மூடப்பட்டுள்ளது.   மக்கள் தங்கள் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களின் உடல்களை பக்வினியா சாலை, பஞ்சாபி பாக், கிரீன் பார்க், தக்ஷின்புரி மற்றும் அருகிலுள்ள சுடுகாடுகளுக்கு இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லுமாறு மாநகராட்சி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. டெல்லி ரயில்வே பாலத்தின் நீர்மட்டம் இன்று காலை 7 மணியளவில் 208.44 மீட்டராக குறைந்துள்ளது. மதியம் 1 மணிக்கு நீர்மட்டம் 208.3 ஆக குறைய வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், அது இன்னும் அபாயக் குறியைத் தாண்டி வெள்ள நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. யமுனையில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாலைகளை அடைவதால் டெல்லியின் பொது போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் குறைந்து வருவதால் அடுத்த ஓரிரு நாளில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று அதிகாரிகள் கூறினர்.    அரசு ஊழியருக்கு வீட்டில் இருந்து வேலை   யமுனை ஆற்றில் அபாயகட்டத்தை மீறி வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close