fbpx
Others

டிபிஐ வளாகத்தில் இருந்தபகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

 கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த10நாட்களாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் தொடர் உண்ணா விரதம் இருந்து வந்தனர். அவர்களை தொடர்ந்து கடந்த 7 நாட்களாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் இரவு பகலாக தொடர் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இந்த ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் டிபிஐ வளாகத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆதரவு தெரிவித் து வந்தனர். அதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, தீவிரப்படுத்தி வந்தனர்.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேரடியாக இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டதுடன், முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் அவர்களின் முடிவை ஏற்காமல் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களைப் போலவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுடன், பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவொளி, நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும், பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியத்திலாவது பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் கேட்டனர். தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர் நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதற்கு பிறகு இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்தார். அவரின் பதிலில் திருப்தி அடையாத அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணா விரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.கல்வித்துறையை சேர்ந்தவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிந்ததால், மேற்கண்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் டிபிஐ வளாகமே ஆசிரியர்களால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், வெளியாட்கள் யாரும் அந்த வளாகத்துக்குள் நுழையாமல் பரிசோதித்து அனுப்பினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து சங்கங்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி, கலைந்து செல்ல கேட்டுக் கொண்டனர். ஆனால் யாரும் அங்கிருந்து செல்லத் தயாராக இல்லை என்று தெரிவித்து அதே இடத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று மாலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் மற்றும் கோரிக்கை குறித்து விவரமாக எடுத்துக் கூறியதுடன், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை கேட்டார். அதன்தொடர்ச்சியாக நேற்று மாலை 6 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் , சமவேலைக்கு சமஊதியம் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில், 6வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, பல்வேறு துறைகளில் 1.6.2009க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிக்க 3 குழு அமைத்து அரசாணை 25 வெளியிடப்பட்டது. அதில் அரசு நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவின் பரிந்துரைகள் 3 காலத்துக்குள் இறுதி செய்யப்பட்டு முதல்வர் அதன் மீது உரிய முடிவெடுக்க சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதை ஏற்று எண்ணும் எழுத்து திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடப்பதாலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மேற்கண்ட பயிற்சியில் சேருமாறும், பயிற்சியை முடித்து பள்ளிக்கு திரும்ப வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2500 ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ரூ.10லட்சம் வரை மருத்துவ காப்பீடு அறிமுகம் செய்யப்படும். அதற்கான காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்துள்ளவர்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 என்றும், இதர பிரிவினருக்கு 58ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பல்வேறு வழக்குகள் ஆசிரியர்கள் தெரிவு சார்ந்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. 171தற்காலிக தொழில் ஆசிரியர்களை மு றையான ஊதிய விகிதத்துக்கு கொண்டு வரும் அரசாணை வெளியிடப்படும். பொது நூலகத்துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றும் ஊரக நூலகர்கள் 446 பேர் 3ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை  வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புகளை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் நேற்று இரவு முழுவதும் பள்ளிக் கல்வி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, பள்ளிக் கல்வி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த கூடாரங்களை அப்புறப்படுத்திவிட்டு செல்ல வேண்டும் என்றும் போலீசார் அறிவித்தனர். ஆனால் ஆசிரியர்கள் கலைந்து செல்லவில்லை.

இதையடுத்து, இன்று காலையில் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இந்தநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்பெறப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கூடுதலான தொகுப்பூதியம் ரூ.2500, ரூ.10 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close