fbpx
Others

செங்குன்றம்–அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை.

  திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அ.தி.மு.க.வின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக தற்போது பொறுப்பு வகித்து வந்தார். இவர் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011 – 2016ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார்.இன்று அதிகாலை இவர் தமது வீட்டில் இருந்து அருகில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலின் மைதானத்தில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 3  இருசக்கர வாகனத்தில் வந்த 6  பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழி மறித்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்த போதும் அவரை விடாமல் துரத்திய கும்பல் கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.  மைதானத்தில் நடைபயிற்சி சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பார்த்திபனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.   இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் பார்த்திபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆவடி மாநக ர காவல் இணை ஆணையர் விஜயகுமார் நேரில் விசாரணை நடத்தினார்.     மேலும் சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.    கொலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் பார்த்திபன் செம்மர கடத்தல் வழக்குகளில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலைக்கான முன்விரோதம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பார்த்திபன் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக பரபரப்பு நிலவி வருவதால் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.    ( தற்போது பாடியநல்லூர் ஊராட்சிமன்ற தலைவராக பார்த்திபனின் அண்ணன் மனைவி ஜெயலட்சுமி நடராஜன் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது  )

Related Articles

Back to top button
Close
Close