செங்குன்றம் அருகே போலீசார் வாகன சோதனை–கஞ்சா பறிமுதல்…?
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பெரிய அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் சோதனைச்சாவடியில் துணை ஆணையர் மணிவண்ணன், உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் செங்குன்றம் ஆய்வாளர் ரமேஷ் உட்பட தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர பதிவெண் கொண்ட இரண்டு கார்களை மடக்கி சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்ததால் தீவிர சோதனையிட்டதில் பண்டல் பண்டலாக கஞ்சா மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் கடத்தி வரப்பட்ட 200கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2கார்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த மாரிராஜ்பாபு, புஜாரிராஜ்பாபு, பட்டி பிரபாகர், குடாகிஷோர்குமார், அனுகுர்செரிவுமேஸ்குமார், அனுகுரிகொண்டபாபு, திப்புர ரமேஷ்பாபு ஆகிய 7பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சா யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனைச் சாவடியில் விழிப்புடன் பணியில் இருந்து வாகன சோதனை செய்து கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை காவலர்களை ஆவடி காவல் ஆணையர் பாராட்டினார்..