fbpx
Others

சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை: தவறுக்கு மன்னிப்பு கடிதம்

  • : பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த போது, ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளனர். செய்த தவறுக்கு அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் டிவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து, கட்சியின் மூத்த தலைவர்களை மதிப்பதும், எந்த முடிவுகளையும் யாரிடமும் கலந்தோசிப்பதும் இல்லை. தான் எடுப்பதுதான் இறுதியானது என்று நினைத்து வருகிறார்.  கட்சியில் தன்னை விட பெரியவர் யாரும் இருக்கக்கூடாது என்று, கட்சிக்காக இரவு பகலாக உழைத்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றவர்களை ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்காக தனக்கு தான் செல்வாக்கு உள்ளதுபோல தான் பங்கேற்கும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்தில் அதிக அளவு மக்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அதாவது மக்களை திரட்டுவதற்கான செலவுகளை அந்தந்த மாவட்ட தலைவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஒரு இலக்கை தீர்மானித்தார். இதற்காக பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்பவர்கள் கடனை வாங்கி செலவு செய்து மக்களை திரட்டி வந்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட தலைவர்கள் ஆடிப்போய் உள்ளனர். அதே நேரத்தில் தான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது நேர்மையாக இருந்ததாக காட்டி கொள்ளும் அண்ணாமலை, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரபேல் வாட்ச் எப்படி வாங்கினார் என்ற விவகாரம் கடந்த 2 வாரத்திற்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இதுவரை அவர் நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. விரைவில் ரபேல் வாட்ச் ரசீதை வெளியிடுவேன் என்று மட்டும் கூறி வருகிறார்.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பாஜவில் உள்ள நடிகை காயத்ரி ரகுராம் மற்றொரு குண்டை தூக்கி வீசினார். அதாவது அண்ணாமலை பாஜ தலைவராக வந்ததில் இருந்து தான் பாஜவில் ஆடியோ, வீடியோ கலாசாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்படி பாஜவில் தினந்தோறும் புது புது சர்ச்சை கிளம்பி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வரும் சம்பவங்கள் பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை விமானத்தில் சென்ற போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுதொடர்பாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 10ம் தேதி திருச்சியில் பாஜ இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பாஜ தலைவர் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் புறப்படும் நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஏமர்ஜென்சி கதவிற்கான பட்டனை அழுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால் பயணிகளை இறக்கி விட்டு பின்னரே, விமானம் தொடர்ந்து இயக்கப்படும் என்ற விதி உள்ளது. அதன்படி விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து மீண்டும் விமானம் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் வரை விமானம் செல்ல காலதாமதாமாகியுள்ளது. அதில் இருந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நடந்த சம்பவத்துக்கு பாஜ தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். அதன் பிறகே சுமார் 3 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானம் நடுவானில் பறந்தபோது இப்படி இருவரும் விளையாடினால், விமானத்தில் இருந்தவர்களின் நிலை என்னவாகியிருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: கடந்த 10ம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள். விதிமுறைகளின்படி பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேரம் தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.  ஒரு உயர் பதவியில் இருந்தவர், அது மட்டுமல்லாமல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் மாநில தலைவராக உள்ளவர் விமானத்தில் இதுபோன்று ஏராளமானோர் பயணம் செய்யும் இடத்தில் இவ்வாறு நடந்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடன் பயணம் செய்த பயணிகளின் உயிரோடு விளையாடுவதா என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அண்ணாமலை பாஜ தலைவராக வந்ததில் இருந்து தான் பாஜவில் ஆடியோ, வீடியோ கலாசாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது..

Related Articles

Back to top button
Close
Close