சண்முகவேலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி…
திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான தோட்டத்தில் தந்தை, மகனுக்கு இடையேயான புகாரை விசாரிக்க சென்ற போது குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சென்றார். அப்போது அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்த எஸ்எஸ்ஐ சண்முகவேலின் உடலை டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் உள்ளிட்ட உயரதிகாரிகள் தோளில் சுமந்து சென்றனர்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்திக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் தங்கபாண்டியன் மற்றும் மணிகண்டன். இவர்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.அவர்கள் பணியாற்றும் தோட்டம் மடத்துகுளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமானதாகும். மகேந்திரன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். நேற்று இரவு தோட்டத்தில் பணியாற்றியபோது மூர்த்தி மற்றும் அவரது மகன்ககள் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் (வயது 57), போலீஸ்காரர் அழகுராஜா ஆகியோர் அங்கு சென்றனர். பிரச்சனையை தடுக்க முயன்றனர். அப்போது தகராறில் ஈடுபட்ட கும்பல் எஸ்எஸ்ஐ சண்முகவேலை வெட்டி கொன்றுவிட்டு ஓடியது. போலீஸ்காரர் அழகுராஜா காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்எஸ்ஐ-வை வெட்டி கொன்றவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையான சண்முகவேலின் குடும்பத்துக்குமுதல்வர்மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, ரூ. 1 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார்.இதற்கிடையே தான் கொலையான சண்முகவேலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சண்முகவேலின் வீட்டுக்கு டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட மூத்த அதிகாரிகள் சென்றனர். சண்முகவேலின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு சண்முகவேலின் உடலை தோளில் சுமந்து சென்றனர். இந்த வேளையில் சண்முகவேலின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சங்கர் ஜிவாலிடம் கதறி அழுதது கண்களை கலங்க வைத்தது.