fbpx
Others

சங்கல்பயாத்திரை–மக்கள் தொடர்பு இயக்கம் நவ.15-ல் தொடக்கம்.

மத்திய அரசின் நாடு தழுவிய மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கமான வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை வரும் நவம்பர் 15-ம் தேதி தொடங்கும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை தெரிவித்துள்ளது

.மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் பிரச்சாரப் பயணத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிரப்புத் துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து அத்துறையின் செயலர் அபூர்வ சந்திரா கூறியதாவது: “நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை கொண்டு செல்லும் நோக்கில் வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை வரும் நவம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது. தீபாவளி பண்டிகையை அடுத்து இந்த யாத்திரை தொடங்கும். இதற்காக தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த 2,700-க்கும் மேற்பட்ட வேன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இந்த வேன்கள் ரதம் வடிவில் இருக்கும். தகவல், கல்வி, தொடர்பு ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்ட இந்த வேன்களில், நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கும். வைஃபை, திரைகள், ஒலிபெருக்கிகள், நேரலையில் கலந்துரையாடும் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த திரையில் தோன்றி மக்களின் சில கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார்.இந்த யாத்திரை, பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு தொடங்க உள்ளது. முதலில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்த வேன்கள் செல்லும். 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 3,700 நகராட்சிகளை இணைக்கும் வகையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த வேன்கள் செல்லும். வீடியோ மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும், சிறிய புத்தகங்கள் மூலமாகவும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.மத்திய அரசின் 20 மக்கள் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கில் இந்த பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்கும் திட்டம், வீடு தோறும் குடிநீர் இணைப்பு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கான கிரிடிட் கார்டு திட்டம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை பரவலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் இந்த யாத்திரை செல்லும். இதற்கு மத்திய அரசு சார்பில் ஒரு பொறுப்பு அதிகாரி இருப்பார். அவர் மாநில அதிகாரிகளோடு இணைந்து இந்த பிரச்சார பயணத்தை ஒருங்கிணைப்பார். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களைச் சந்திப்பதோடு, பயன் பெறாத மக்களையும் இந்த யாத்திரை சென்று சேரும். சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த பிரச்சார யாத்திரை இப்போது தொடங்கப்படாது. தேர்தல் முடிந்த பிறகே இந்த மாநிலங்களில் யாத்திரை தொடங்கும்” என்று அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close