fbpx
Others

கோவை— கதி கலங்க வைக்கும் ‘மக்னா’ யானை

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியேறிய மக்னா யானை சுமார் 40 கிமீ பயணித்து நேற்று முன்தினம் ஜமீன் களத்தூர் பகுதிக்கு வந்தது. காலை 10 மணி முதல் மாலை வரை ஓய்வெடுத்துவிட்டு இரவு மீண்டும் புறப்பட்டது. அங்கிருந்து சென்னியூர், முத்துக்கவுண்டனூர் உள்ளிட்ட பல ஊர்கள் வழியாக வந்து நேற்று அதிகாலை எல்அன்ட்டி பைபாஸ் சாலையை தாண்டி மதுக்கரை பகுதிக்குள் புகுந்தது. யானையை வனத்துறையினர் விரட்டினர். ஆனால் மதுக்கரைக்குள் புகுந்த யானை வனப்பகுதிக்கு போகாமல் மதுக்கரை மார்க்கெட் அருகே குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு வெளியேறியது. பின்னர் பெட்ரோல் பங்க்குக்குள் புகுந்து குரும்பபாளையம், சுகுணாபுரம் வழியாக குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் சென்றது.  அங்குள்ள அறிவொளிநகர், பிள்ளையார் புரம் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில், காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் வனத்துறையினர் கலக்கம் அடைந்தனர். ஆனால் யாருக்கும் தொந்தரவு அளிக்காத  யானை, சுந்தராபுரம், மாச்சம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கறிவேப்பிலை தோட்டத்திற்குள் புகுந்தது. சுமார் 60 கி.மீ தூரம் சுற்றியதாலும், வெயில் கொளுத்த துவங்கியதாலும் யானை வேறு எங்கும் நகராமல் தோட்டத்திற்குள்ளேயே ஓய்வெடுக்க துவங்கியது. பின்னர் நேற்று மாலை 6.30 மணிக்கு தோட்டத்தில் இருந்து வெளியேற யானை தயாரானது. அது மாநகர பகுதிக்குள் நுழைந்து விடாமல் தடுத்து, மதுக்கரை வனப்பகுதியை நோக்கி விரட்ட வனத்துறை ஊழியர்கள் தயார் நிலையில் இருந்தனர். 2 முறை தோட்டத்தை விட்டு வெளியே வந்த யானை மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதை பார்த்து திரும்பி சென்றது. இதனால் யானை தோட்டத்தை விட்டு வெளியே வருவதற்காக வனத்துறை ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.  முதியவர் காயம்: மதுக்கரை பகுதிக்குள் வருவதற்கு எல் அன்ட் டி பைபாஸ் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்துக்குள் நுழைந்த யானை ஆடு மேய்த்து கொண்டிருந்த பழனிச்சாமி (80) என்பவரை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.

Related Articles

Back to top button
Close
Close