fbpx
Others

கொளத்தூர் ரெட்டேரி–புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நீர் பகிர்மான நிலையம் கொளத்தூர்-ரெட்டேரி 200 அடி சாலையில் அமைந்துள்ளது. இங்கு ரூ.21 கோடியே 39 லட்சம் செலவில் ரெட்டேரியில் உள்ள நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டது.இந்த நிலையம் 1 கோடி லிட்டர் தண்ணீரை கையாளும் திறன் கொண்டது. இந்த நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.இந்த மையத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. 2 நிலை திட வடிகட்டிகள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளோரினேஷன் செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக 1.5 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த திட்டத்தின் மூலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அடங்கி உள்ள குமரன் நகர், வேலவன் நகர், பெரியார் நகர், ஜவகர் நகர், திருப்பதி நகர், கம்பர் நகர், அஞ்சுகம் நகர், ஜி.கே.எம். காலனி, செம்பியம் மற்றும் பல்லவன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரெட்டேரி 200 அடி சாலையில் அமைந்துள்ள கொளத்தூர் ஏரியை நீர்வளத்துறை சார்பில் ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள் மற்றும் உபரிநீர் கால்வாயை மேம்படுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம் அகரம் மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ‘சிங்கார சென்னை’ 2.0 திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் 18 வகுப்பு அறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, அலுவலக அறை, மொழி ஆய்வக கூடம், தையல் பயிற்சி கூடம், மனையியல் ஆய்வக கூடம், அறிவியல் ஆய்வக கூடம், நூலகம், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் என தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் 2,371 சதுர மீட்ட பரப்பளவில் கூடுதல் பள்ளி கட்டிடம் அமைக்கும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசு பொருட்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெரம்பூர் லூர்து மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அப்பள்ளிக்கு இசைக்கருவிகள் வாங்குவதற்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தார். பின்னர், கொளத்தூர் தொகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்துக்கு (எம்.எல்.ஏ.அலுவலகம்) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, பொதுமக்களுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, தொழிலாளர்களுக்கு மாவு அரவை எந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள், மீன்பாடி வண்டி என மொத்தம் 130 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close