fbpx
Others

கார்கே-பிரதமர் மோடியை எலியுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம்

 ராஜஸ்தானில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை எலியுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்யசபாவில் பா.ஜ.க-வினர் குரல் எழுப்பினர். ஆனால், நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு கேட்க முடியாது என கார்கே திட்டவட்டமாக தெரிவித்தார். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மக்‍களை ஒன்றுதிரட்டும் வகையில் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. தமிழகத்தின் குமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசத்தில் நிறைவு பெற்று, தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அங்கு நேற்று, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம், நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா, ராஜிவ் உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். நீங்கள் பா.ஜ.க., என்ன செய்தீர்கள்? உங்கள் நாய்கள் எதுவும் நாட்டுக்காக இறந்ததா? குடும்ப உறுப்பினர்கள் யாராவது தியாகம் செய்திருக்கிறார்களா? இல்லை. மோடி அரசாங்கம் தாங்கள் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறிக்கொண்டு, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்து கொள்கிறார்கள்.
இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஊடுருவலை மத்திய அரசு தடுக்க முடியாததால், பார்லிமெண்டில் விவாதம் நடத்தத் தயங்குகிறது. பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார், ஆனால் உண்மையில், அவர் உள்ளே எலி போல் செயல்படுகிறார் என கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று கூட்டம் தொடங்கியதுமே பா.ஜ.க தரப்பினர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.இது குறித்து மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்; நேற்று மல்லிகார்ஜூன கார்கே அநாகரீகமாக பேசியுள்ளார். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிருஷ்டவசமானது. ஆதாரமற்ற விஷயங்களை பேசியதையும், பொய்களை தேசத்தின் முன்வைக்க அவர் முயற்சிப்பதையும் நான் கண்டிக்கிறேன். பார்லிமென்டில் நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். கார்கே தனது மனநிலை மற்றும் பொறாமையை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதிலளித்த கார்கே, நாடாளுமன்றத்துக்கு வெளியே ராஜஸ்தானின் அல்வாரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போதுதான் நான் பேசினேன். அரசியல் ரீதியாக நான் பேசியது அவைக்கு வெளியே தான். இதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாவதாக, சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்று என்னால் இன்னும் சொல்ல முடியும் என பதில் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close