fbpx
Others

கவர்னர் ஆர்.என். ரவி மீதான புகாரை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி

ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடித்தத்தை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்புடன் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு நேற்று அனுப்பி வைத்தார். தமிழக  சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி நடந்தது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 40 நிமிடங்கள் உரையாற்றிய  ஆளுநர் அச்சிடப்பட்ட உரையில் இருந்த திராவிட மாடல், மற்றும் பெரியார், அண்ணா, கலைஞர், அண்ணல் அம்பேத்கர், தமிழ்நாடு அரசு ஆகிய வார்த்தைகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு  பேசினார்.இதையடுத்து சட்டபேரவையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் வாசிக்கப்பட்ட தமிழ் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை கூட்டம் முடியும் முன்னதாகவும், தேசிய கீதம் இசைக்கும் முன்னதாகவும் உடனடியாக அவையில் இருந்து திடீரென வெளியேறினார். இது மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளுநர் நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய கடிதத்தை தமிழக அரசின் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் எம்பிக்கள் கடந்த 12ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து கொடுத்தனர். இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று அதனை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவரது குறிப்பையும் இணைத்து அனுப்பியுள்ளார். அதாவது, தமிழக ஆளுநர் தொடர்பான விவகாரத்தில் உரிய  நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close