Others
கம்பம் தேவர் குருபூஜை 2022 ……செய்தி
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வையொட்டி தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெண்கல சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60 ஆம் ஆண்டு குருபூஜை விழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை விழாவாக நடைபெற்றது.

அதனை ஒட்டி அக்டோபர் 30 முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முத்துராமலிங்க தேவர் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் காலை முதல் வருகை புரிந்தனர் .

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ வெண்கல சிலை தேனி மாவட்டம் கம்பம் நகரில் கம்பம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை ஒட்டி அனைத்து கட்சிகளும் பொதுமக்களும் முத்துராமலிங்கத் தேவர் வெண்கலைச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக நேற்று தேனி மாவட்டம் கம்பத்தில் சீர் மரபினர் சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக கம்பத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர்.

அப்பொழுது பண்டைய வீர விளையாட்டுக்களான வாள் சுற்றுதல், சுருள் வளையம் சுற்றுதல், சிலம்பம் சுற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளை பொதுமக்கள் மத்தியில் பெண்கள் சிறப்பான முறையில் செய்து காண்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் அவரின் திருவுருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து வணங்கினர். அதன்பின்னர் சீர் மரபினர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பாக சீர் மரவினருக்கு எதிராக செயல்படும் அரசுக்கு வாக்களிக்க மாட்டோம், மதுரையில் உள்ள விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது போன்ற உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். இந்த விழாவில் தேவர் சமுதாய அமைப்புகள், சீர் மரபினர் அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்..