fbpx
Others

கடலூர் தொகுதி – காங். Vs பாமக Vs அதிமுக கைப்பற்ற போவது யார்..?

 தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள கடலூர் மக்களவைத் தொகுதி, நெய்வேலி என்எல்சி நிறுவனம், கடலூர் துறைமுகம் எனப் பல அடையாளங்களைக் கொண்டது.என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். கடலூர் புனித டேவிட் கோட்டையில் இருந்து தான் இந்தியாவின் தென் பிராந்தியத்தை ஆங்கிலேயர்கள் தொடக்கத்தில் ஆண்டுவந்துள்ளனர். வணிகத் தொடர்புகளுக்கும் கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய வரலாற்று முக்கியத்துவமான இத்தொகுதியில் பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில், விருத்தகிரீஸ்வரர் கோயில், வடலூர்சத்தியஞான சபை உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களும் சிறப்பு சேர்க்கின்றன.கடலூர் துறைமுகமும், இங்குள்ள மீன்பிடித் தொழிலும் முக்கிய வருவாய் ஈட்டுபவையாக உள்ளன. பண்ருட்டி பகுதியில் விளையும் பலா, முந்திரி வகைகள் இத்தொகுதிக்கான சிறப்பு கடலூர் தொகுதியைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே காங்கிரஸ் வென்று வரும் தொகுதியாக இருந்து வந்துள்ளது. திமுக கூட்டணியிலும் காங்கிஸூக்கே அதிகமுறை இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன் உளுந்தூர்பேட்டை ( தனி ), நெல்லிக்குப்பம், கடலூர், பண்ருட்டி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகியவை கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்தன.தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் கடலூர் மக்களவைத் தொகுதிதிட்டக்குடி ( தனி ), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப் பாடி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ளது. கடலூர் மக்களவைத் தொகுதியில் முதன் முதலில் 1951-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அன்று முதல் 2019 வரை நடந்துள்ள 17 தேர்தல்களில், 7 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 முறையும், திமுக 5 முறையும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஒருமுறையும், சுயேச்சை ஒரு முறையும்,தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.2014-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த அருண்மொழிதேவனும், 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ரமேஷூம் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற ரமேஷ் 5,22,160 வாக்குகள் பெற்று, 1,43,983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் விஷ்ணு பிரசாத், பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பாச்சான், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகன் மற்றும் 15 சுயேச்சைகள் உள்பட 19 பேர் களத்தில் உள்ளனர்.இந்தத் தொகுதியில் 19 பேர் போட்டியிடுவதால் இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தகதகக்கும் கோடை வெயிலுக்கு இடையே, வேட்பாளர்கள், கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ‘தொகுதியை நம்பர் 1-ஆக மாற்றிக் காட்டுவேன்’ என்ற வாக்குறுதியுடன் இண்டியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தத் தொகுதிக்கு புதியவரான இருவருக்கு திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன் மற்றும் காங்கிரஸார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, முன்னாள் பண்ருட்டி ஏம்எல்ஏவாக இருந்தவர். தேமுதிக மாவட்ட செயலாளராக உள்ளார். ‘தொகுதியை முன்னுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கையையும் எடுப்பேன்’ என்று கூறி களத்தில் வலம் வருகிறார். இவருக்காக அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத், அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர் அதிமுக, தேமுதிக வாக்குகளை நம்பியுள்ளார். அரசியலுக்கு புதியவரான பாஜக கூட்டணியின் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், எளிய முறையில் வாக்காளர்களிடையே பேசி, அவர்களை கவர்ந்து வருகிறார். “தமிழகத்தின் அனைத்து நிலையிலும் கடலூர் மாவட்டம் கடைசி மாவட்டமாக உள்ளது. அதை கூடிய வரையிலும் முன்னுக்கு கொண்டு வருவேன். முந்திரிக்கான ஆதார விலையை உருவாக்கி தருவேன். பலா, முந்திரிக்கான மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்திக் கூடங்களை ஏற்படுத்துவேன்” என்ற வாக்குறுதியுடன் களத்தில் வலம் வருகிறார்.இவர் முழுக்க முழுக்க பாமக வாக்குகளை நம்பியுள்ளார். அதே நேரத்தில் இப்பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும் பாஜக வாக்குகளும் தனக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறார். பாமக, பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இவருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகம் தனது கட்சி தொண்டர்களுடன், தங்கள் கட்சி முன் வைத்த கோரிக்கைகளை எடுத்துச் சொல்லி வீதிவீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Related Articles

Back to top button
Close
Close