fbpx
Others

கடலில் கொட்டப்பட்ட ரசாயனஆயுதங்களால் அபாயம்…?

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பால்டிக் கடலில் கொட்டப்பட்ட ரசாயன ஆயுதங்கள் தற்போது மாபெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன.மாதிரிப் படம்

இரண்டாம் உலகப்போரின்போது கடலில் வீசப்பட்ட ரசாயன ஆயுதங்களால் கடல் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதர்களுக்கு அபாயம் காத்திருப்பதாக அலாரம் அடித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு. 2011 மற்றும் 2019க்கு இடையில் போலந்து அகாடமி ஆஃப் சயின்ஸ் நடத்திய இந்த ஆய்வு குறித்து Gazeta Wyborcza என்னும் போலந்து நாட்டுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி பால்டிக் கடலுக்கு அடியில் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன் வரையிலான ஆயுதங்கள் பல்வேறு பகுதிகளில் பரவிக் கிடப்பது தெரியவந்துள்ளது.இவற்றின் உணமையான அளவை தற்போது கண்டுபிடிப்பது கடினம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1939 முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் பெரும்பான்மையான உலக நாடுகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து மோதிக் கொண்டன. அச்சு நாடுகள் என்றும் நேச நாடுகள் என்றும் அணி பிரிந்து மோதிக் கொண்ட இந்தப்போர், வரலாற்றில் அதிக உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராக கருதப்படுகிறது.அச்சு நாடுகள் தோல்வியைத் தழுவிய நிலையில், போர் முடிவுக்கு வந்தது. போருக்குப் பின் நடைபெற்ற போஸ்ட்டாம் (Potsdam ) மாநாட்டில் வெற்றி பெற்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி நாடுகளின் எல்லைகளை மறு வரையறை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஜெர்மனி மற்றும் போலந்தின் ராணுவ கிடங்குகள் அழிக்கப்பட்ட நிலையில், ஜெர்மனியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரசாயன ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் பணி ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து ரசாயன ஆயுதங்களை கடலில் புதைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஸ்வீடன் மற்றும் பால்டிக் நாடுகளுக்கு இடைப்பட்ட காட்லேண்ட் படுகை (Gotland Basin) பகுதி ஆயுதங்களைக் கொட்டும் இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வழியில் பல்வேறு பகுதிகளில் பெட்டி பெட்டியாக ஆயுதங்கள் கொட்டப்பட்டன. மரத்தாலான பெட்டிகள் முழுமையாக நீரால் சூழப்படும் வரை மிதந்து பின்னர் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டு கடலின் அடியில் சேர்ந்தன.

இதேபோல போர்ன்ஹோம் (Bornholm Basin) படுகையிலும் அதிகாரப்பூர்வமான சோவியத் பதிவுகளின்படி, சுமார் 40 ஆயிரம் டன் ஆயுதங்கள் 100 மீட்டர் ஆழத்தில் கொட்டப்பட்டன. வடக்கு போலந்தின் ஹெல் தீபகற்பத்திற்கு அருகிலுள்ள க்டான்ஸ்க் (Gdansk Basin) படுகையிலும் ரசாயன ஆயுதங்கள் கொட்டப்பட்டன. இதனால் மஸ்டர்ட் வாயு, கண்ணி வெடிகள் மற்றும் வெடி குண்டுகள் ஆகியவை டன் கணக்கில் கடலுக்கடியில் தஞ்சமைடைந்தன.மஸ்டர்டு வாயு எனப்படுவது சல்ஃபர் மஸ்டர்டு என்னும் வேதிப்பொருளாகும். இதன் மணம் கடுகுச் செடியைப் போல இருப்பதால் இது மஸ்டர்டு வாயு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாயு உடைகளை எளிதாகக் கடந்து சென்று உடலை பாதிக்கக் கூடியது. மேலும் கண்களைப் பாதித்து பார்வை இழக்கச் செய்யும் இவ்வாயுவை அதிகமாக சுவாசிக்கும் போது சுவாச மண்டலத்தில் இரத்தக் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.இத்தகைய அபாயகரமான ரசாயன ஆயுதங்கள் தான் அப்போது கடலுக்குள் கொட்டப்பட்டன. இதனால் கடலின் சூழலியல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கடலடியில் கிடக்கும் ரசாயனங்களில் ஆறில் ஒரு பங்கு வெளியானால் பால்டிக் பகுதியில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு எந்த உயிரினமும் இருக்காது என போலந்தின் தேசிய நெருக்கடி நிலை மேலாண் மையம் தெரிவித்துள்ளது. இத்தனை பயங்கரமான அந்த ஆயுதங்களில் இருந்து தற்போது ரசாயனம் மெல்ல கசியத் தொடங்கி உள்ளது.இதனால் இத்தகைய ஆயுதங்களைச் சுற்றி 70 மீட்டர் அளவிலான பரப்பு நச்சுத்தன்மை வய்ந்ததாக மாறி உள்ளது. இந்த ரசாயனத்தின் தாக்கத்தால் எரிந்து போன மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கிய சம்பவங்கள் சமீபகாலத்தில் நிகழ்ந்துள்ளன. கடற்கரைக்கு அடித்து வரப்பட்ட அபாயகரமான ஆயுதங்களால் மீனவர்கள் காயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. கடலின் அடியில் உறங்கும் இந்த ஆயுதங்களால் உடனடி பாதிப்பு இல்லையென்றாலும், நீண்ட கால பதிப்பு இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முதலாவதாக கடல் சூழலியல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்களுக்கு இவை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் கடலுக்கு அடியில் நடைபெறும் கடலடி தொலைத்தொடர்பு கேபிள் புதைப்பு பணிகள், காற்றாலை இயந்திரங்களை அமைக்கும் பணிகள் ஆகியவற்றின் போது மனிதர்களும் நேரடியாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஐரோப்பாவின் 7 முக்கிய மீன் ஏற்றுமதியாளர்களில் 4 நாடுகள் பால்டிக் பகுதியைச் சேர்ந்தவை. இதனால் ஐரோப்பாவின் பொருளாதாரத்துக்கும் இது அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இந்த விவகாரங்களுக்கு ரஷ்யாவும் ஜெர்மனியுமே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ள போலந்து, அந்த அரசாங்கங்களிடமிருந்து அதிக அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. கடலில் உறைந்து கிடைக்கும் அபாயங்கள் உயிர் பெறும் முன் உரிய நடவடிக்கையை உலக நாடுகள் எடுப்பதே வருங்காலத் தலைமுறையை வாழச் செய்வதற்கான வழி..

 காமராஜ்சுப்ரமணியன்....  நன்றி

Related Articles

Back to top button
Close
Close