ஐகோர்ட்–ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைத்தும் பிணையத்தொகை செலுத்த முடியாமல் 800க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் இருப்பதாக நாளிதழ் செய்தி அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து இன்று விசாரணை நடத்தியது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜாமீன் வழங்கப்பட்ட பின்னரும் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் 104 பேர் சிறையிலேயே இருப்பதாக”க் கூறி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், அதிகபட்சமாக கோவை மத்திய சிறையில் 27 பேர் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக 32 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும்,
எஞ்சியுள்ளவர்களையும் ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் , “நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்து ஜாமின் வழங்குவதில் எந்த பயனும் இல்லை. குற்ற வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமின் வழங்கும் போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்,” என அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.