உ.பி, கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி மாற்றம்: நவ.20-ல் வாக்குப் பதிவு
பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நவம்பர் 20-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 20-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “கேரளாவின் கல்பாத்தியில் நவம்பர் 13-15-ல் ரத உற்சவம் நடைபெறுகிறது. இதுபோல் நவம்பர் 15-ல் கார்திகை பவுர்ணமி, குருநானக் ஜெயந்தி கொண்டாப்படுகிறது. வாக்குப் பதிவில் இந்த விழாக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் கூறின. எனவே அவற்றின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.