உண்மையான எதிரி சீனா+பாகிஸ்தான் மத்திய அரசுக்கு….ராகுல் காந்தி கேள்வி..?
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், 1971 போரின் போது பாதுகாப்புப் படையினருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முழு சுதந்திரம் அளித்தார். அவர் எந்த வல்லரசு நாட்டின் ஆதிக்கத்திற்கும் அடி பணியவில்லை. இந்திரா காந்தியைப் போல் மோடிக்கு தைரியம் இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும். இந்திய ராணுவத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று தைரியம் இருந்தால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்லட்டும்.. மத்திய அரசு செய்த தவறு காரணமாக விமானங்களை இழந்தோம். அரசியல் தலைமையின் உத்தரவு காரணமாகவே பாகிஸ்தான் ராணுவ தளங்களைத் தாக்கவில்லை என்று ராணுவ அதிகாரியே கூறுகிறார். இந்திய ராணுவம் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்தது பிரதமர் மோடிதான்.இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக 29 முறை டிரம்ப் கூறிவிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னது பொய் என்று மோடியால் கூற முடியுமா? எந்த நாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. இதன் மூலம் இந்தியாவையும், பாகிஸ்தானையும் சமமாகப் பாவித்துவிட்டனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விருந்து அளித்ததைக் கண்டிக்க மோடிக்கு தைரியம் இருக்கிறதா? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எந்த கிரகத்தில் இருக்கிறார்? இந்தியாவின் ராணுவ நடவடிக்கை, இலக்குகள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ராணுவ நடவடிக்கை குறித்த தகவல்களை நேரலையில் சீனா கொடுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது குறித்து ஏற்கனவே நான் பலமுறை எச்சரித்த போது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை திவாலாகிவிட்டது. தீவிரவாதிகள் பற்றி கேள்வி கேட்டாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என்று சித்தரிக்க முயல்கிறார்கள். அதுதான் பாஜக அரசின் மனநிலை. சீனா என்ற ஒரு வார்த்தையைக் கூட பாதுகாப்பு அமைச்சரோ வெளியுறவு அமைச்சரோ கூறவில்லை. சீனா என்று சொல்லவே பயப்படுகிறார்கள். உண்மையான எதிரி சீனா தான். என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.