fbpx
Others

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு-ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும்

‘மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அது சட்டமாக்கப்படும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட காலம் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இத்தகைய சம்பவங்கள்நடந்துள்ளன. இந்நிலையில், தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆளும் பிஆர்எஸ் கட்சி, சட்டப்பேரவையில் நிறைவேற்றிய 10 மசோதக்களுக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், மசோதாவுக்கு ஒப்புதல் தரும் விவகாரத்தில் ஆளுநர்களுக்க குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தெலங்கானா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருக்கும் அரசு, மக்கள் நலனுக்காக கொண்டு வரும் மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநர் ஒப்புதல் தராமல் இருப்பதால், அவற்றை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மசோதாவை நிறைவேற்ற மாநில அரசு கையேந்த வேண்டும் என்று நினைக்கிறார்களா?’’ என கடுமையாக கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘‘ஏப்ரல் 23 வரை எந்த மசோதாவும் நிலுவையில் இல்லை என ஆளுநர் அலுவலகம் தகவல் தந்துள்ளது’’ என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டம் 200வது பிரிவை நினைவில் கொள்ள வேண்டும். சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் முடிந்த வரையில் விரைவில் ஒப்புதல் தர வேண்டும். அல்லது மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு உரிய கூடுதல் தகவல் வழங்கக் கோரி அதை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ‘கூடிய விரைவில் ஒப்புதல்’ என்ற இந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அதை ஆளுநர்கள் மனதில் கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டார். ஆனாலும், இந்த விவகாரத்தில் ஆளுநர்கள் மசோதா மீது முடிவெடுக்க எந்த கெடுவும் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படவில்லை

Related Articles

Back to top button
Close
Close