fbpx
Others

இஸ்ரேலின் உலகப்புகழ் உளவு அமைப்பு ‘மொசாத்’ கோட்டை விட்டது எப்படி?

இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 7ம் தேதி பயங்கர தாக்குதல் நடத்தியதும் உலகெங்கும் எழுந்த முக்கிய கேள்வி, கோட்டைவிட்டதா மொசாத் என்பதுதான். உலகெங்கும் தங்கள் ஆக்டோபஸ் கரங்களை பரப்பி தங்கள் நாட்டுக்காக வேவு பார்ப்பதுதான் உளவு அமைப்புகளின் வேலை. அமெரிக்காவின் சி.ஐ.ஏ, ரஷ்யாவின் கே.ஜி.பி இதில் புகழ்பெற்றது. ஆனால் இவற்றை விட, உலகின் முன்னணி உளவு அமைப்புகளின் பட்டியலில் குட்டி நாடான இஸ்ரேலின் ‘மொசாத்’ உளவு அமைப்புக்கு முக்கிய இடம் உண்டு. வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அதன் இரட்டை கோபுர தாக்குதலை கூட முன்கூட்டியே எச்சரித்த பெருமை கொண்டது மொசாத்.  அமெரிக்காவில் தீவிரவாதிகள் பலர் நுழைந்துள்ளார்கள். அவர்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அமெரிக்காவுக்கு மொசாத் தகவல் அனுப்பியது. ஆனால், அமெரிக்கா உஷாராகாததால் பெரும் தாக்குதலுக்கு ஆளானது. அதேபோல் இந்தியா உட்பட பல நாடுகளை முன்கூட்டியே எச்சரித்துள்ளது மொசாத். அந்த அளவுக்கு உலகெங்கும் தனது உளவாளி படையை கொண்டது மொசாத். இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லரின் நாஜி படைகள் ஐரோப்பாவில் கண்ணில் பட்ட யூதர்களையெல்லாம் கொன்றுகுவிக்க, உயிருக்கு பயந்து பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் தஞ்சம் புகுந்தனர்.இதைதொடர்ந்து, 1948ல் யூதர்களுக்கான தனிநாடாக இஸ்ரேல் உதயமானதும், ஒருவிதமான அச்சத்துடனேயே அவர்கள் வாழ்த்துவந்தனர். அப்போது, அவர்களது அச்சம் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது அல்ல. மீண்டும் ஒரு இனஅழிப்புக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது என்பதுதான். இதன் விளைவாக 1949ல் உருவானதுதான் மொசாத் உளவு அமைப்பு. இஸ்ரேல் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டது இந்த அமைப்பு. காற்று நுழைய முடியாத இடத்தில் கூட மொசாத் புகுந்துவிடும் என்பதுஉலகறிந்தது. இஸ்ரேலை யாரும் புக முடியாத எஃகு கோட்டையாக மாற்றிக் காட்டியது மொசாத். பாலஸ்தீனமாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும், ரஷ்யாவாக இருக்கட்டும் உலகெங்கும் தனது உளவாளிகளை கொண்டது இந்த அமைப்பு. இப்போது தாக்குதல் நடத்திய ஹமாஸ் இயக்கத்திலும் மொசாத்துக்கு ஆட்கள் உண்டு. இஸ்ரேலுக்கு இவர்களால் ஆபத்து என்று மொசாத் முடிவு செய்துவிட்டால், அவர் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஸ்கெட்ச் போட்டு தூக்கிவிடுவார்கள், மொசாத் உளவாளிகள். அந்த அளவுக்கு பண பலமும், ஆட்பலமும் அதிகாரமும் கொண்டது இந்த அமைப்பு.    மொசாத் தான் தீர்த்துக்கட்டியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் கச்சிதமாக காரியத்தை முடித்துவிடுவார்கள். இப்படி மொசாத்தால் போட்டுத் தள்ளப்பட்டவர்கள் பட்டியலின் நீளம் அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக பாலஸ்தீனிய குழுக்கள் மற்றும் லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளை கண்காணிக்க மட்டும் பல்லாயிரம் உளவாளிகளை மொசாத் பயன்படுத்துகிறது. காசா, இஸ்ரேல் எல்லை பகுதி முழுவதும் நவீன கண்காணிப்பு கேமராக்கள், ஆட்கள் நகர்ந்தாலே கண்டிறியும் மோஷன் சென்சார்களை மொசாத் பொருத்தியிருந்தது.ஆனால், இதையெல்லாம் தாண்டி, மொசாத்தின் கண்ணில் மண்ணை தூவி ஓராண்டாக திட்டமிட்டு ஒரே நேரத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் ஏவியிருப்பது இஸ்ரேல் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வளவு பெரிய ஆள், ஆயுத திரட்டலை கண்டுபிடிக்க மொசாத்தால் முடியவில்லையா? அல்லது தகவல் கிடைத்தும் அதை கண்டுகொள்ளாமல் அசட்டையாக விட்டுவிட்டதா மொசாத் தலைமை என்று பல கேள்வி இன்றைக்கு இஸ்ரேல் அரசு முன் எழுந்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் மக்களை பொறுத்தவரை மொசாத் நம்மை காக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு போய்விட்டது. மொசாத்தின் எஃகு கோட்டை இன்று தகர்க்கப்பட்டது, யானைக்கும் அடிசறுக்கும் என்பதைதான் காட்டுகிறது.
மொசாத்தின் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து இஸ்ரேல் தீவிர விசாரணையை துவங்கிவிட்டது. ஆனால், என்னதான் உஷாராக இருந்தாலும் கொஞ்சம் கவனம் பிசகினாலும் எதிரி முந்திவிடுவான் என்பதை ஹமாஸ் தாக்குதல் நிரூபித்துள்ளது. இது உலகெங்கும் உள்ள உளவு அமைப்புகளுக்கு ஒரு பாடம்.* மொசாத்தின் ஆயுதங்களாக மாறிய வெடிக்கும் செல்போன், டிரோன்
பல தீவிரவாத இயக்க காமாண்டர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து படுகொலை செய்ததுள்ளது இஸ்ரேல். இதற்காக, மொசாத் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்ற நாட்டு ராணுவத்தையே வியக்க வைக்கும். எதிரியின் கார் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ் டிராக்கிங் கருவியை ரகசியமாக பொருத்தி, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி தீர்த்துக்கட்டியுள்ளது மொசாத். அதேபோல், வெடிக்கும் செல்போன்களை கொடுத்துக் கூட, எதிரிகளை அழித்தொழிக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது மொசாத்.

மொசாத்
துவக்கம் டிசம்பர் 13, 1949
மொத்த உளவாளிகள் சுமார் 7 ஆயிரம்
ஆண்டு பட்ஜெட் ரூ.22,734 கோடி
தலைவர் டேவிட் பார்னியா

Related Articles

Back to top button
Close
Close