fbpx
Others

இறையன்பு–புதுமை பெண் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்:

கல்லூரி கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு பேசினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் சென்னை ஆண்டிமானியம் தோட்டம் திட்டப்பகுதியில் 480 பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கப்பட்டு வரும் பணிகளையும், வன்னியபுரம் திட்டப்பகுதியில் 192 பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியினையும் மற்றும் நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் விரைவில் இடிக்கப்படவுள்ள 266 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பழைய குடியிருப்புகளை பாதுகாப்பான முறையில் இடித்து புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி பயனாளிகளுக்கு ஒப்படைக்க வேண்டும். இடிக்கப்படவுள்ள பழைய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களிடம் பேசி அவர்களை அங்கு இருந்து விரைவில் அப்புறப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணியினை விரைவில் தொடங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பெரும்பாக்கம் திட்டப்பகுதி 5-ல் ரூ.31.42 கோடியில் கட்டப்பட்டு வரும் 256 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பெரும்பாக்கம் திட்டப்பகுதி-I மற்றும் முன்மாதிரி திட்டப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கங்களின் பிரிதிநிதிகளுடன் கலந்து உரையாடினார்..

தலைமை செயலாளர் இறையன்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரும்பாக்கத்தில், மாணவ மாணவிகளை சந்தித்து பேசுகையில், ‘‘கல்வியை நாம் ஒரு உயர்ந்த நோக்கத்தோடு கற்க வேண்டும். நாம் முன்னேறி உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமல்ல நம்மை போல் கஷ்டப்படும் மக்களையும் நாம் உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு கல்வி கற்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயின்ற பெண்கள் தற்போது உயர் கல்வியை தொடர்ந்து வருகிறார்கள். அவர்களை ஊக்குவிப்பதற்காக புதுமை பெண் என்ற திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.

இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார். மேலும் தோழமை தொண்டு நிறுவனம் மற்றும் சுமைதாங்கி தொண்டு நிறுவனம் சார்பில் 10 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.1,81,500க்கான காசோலையை தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close