fbpx
Others

இறைத்தூதர்கள் எதற்காக உலகிற்கு அனுப்பப்பட்டார்கள்…?

இறைவனின் வழிகாட்டுதல்களையும், இறைவனின் சட்டங்களையும் மனிதர்களிடம் சேர்ப்பதற்காகவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். இறைவழிகாட்டுதல் எனும் மாபெரும் அருட்கொடையை இறைத்தூதர்கள், மனித சமூகத்திற்கு வழங்கினார்கள். இறைத்தூதர்கள் வராவிட்டால் மார்க்கம் நமக்குக் கிடைத்திருக்காது. அந்த நிலையில் மனிதன், “இறைவா, என்னை நீ படைத்து அப்படியே விட்டுவிட்டாயே. உன் திருப்தியைப் பெறும் வழிமுறை தெரியாமலேயே நிர்கதியாக என்னை விட்டுவிட்டாயே. உன் கோபத்திலிருந்து எப்படித் தப்பிப்பேன்? எந்தச் செயல்களால் நீ மகிழ்ச்சி அடைவாய்? எந்தச் செயல்களைச் செய்தால் நீ கோபம் கொள்வாய் என்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. உன்னை எப்படித் திருப்திப்படுத்துவேன்? வெற்றி பெறுவதற்கான வழிமுறையை நான் எங்கிருந்து பெறுவேன்?” என்றெல்லாம் புலம்பிக் கொண்டு இறைவனிடம் முறையிட்டுக் கொண்டிருப்பான். இப்போது அந்தக் காரணம் எடுபடாது. அதற்கு வழியே இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், இறைவனின் தூதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வருகை தந்தார்கள். மேலும், மனிதனுக்கு சத்தியப் பாதையைக் காண்பித்துக் கொடுத்தார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த முதல் மனிதரையே தன் தூதராகவும் பிரகடனம் செய்தான். அவருக்கு நேரடியாகவே வழிகாட்டுதலை வழங்கினான். நேர்வழியையும் வழிகேட்டையும் தெளிவுபடுத்தினான். அந்த முதல் மனிதர் இறைவன் காட்டியவாறு தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டார்.ஆனால், அந்த நல்ல மனிதரின் மூலமாகத் தோன்றிய அவருடைய வழித்தோன்றல்கள் இறைவன் அருளிய நல் வழியைக் காலப் போக்கில் மறந்தார்கள். தவறான வழிகளைக் கடைப் பிடித்தார்கள். அதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.ஆயினும், இறையருள் இறைவனின் கோபத்தை மிகைக்கும் ஆற்றல் பெற்றது. இறைவன் தன் அடியார்களைக் கடைசி வரை வேதனையிலிருந்து காப்பாற்றவே விரும்புகிறான்.எனவே, மனிதர்கள் எப்போது வரம்பு மீறி இறைத்திருப்திக்கு மாற்றமாகச் செயல்பட்டாலும் அவர்களை நல்வழிப்படுத்த தூதர்களை அனுப்புவான். அதன் மூலமாக இறைவேதனை குறித்து அவர்களுக்கு விழிப்பு உணர்வூட்டி எச்சரிப்பான். மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதைத் தூதர்கள் தெளிவாக எடுத்துரைப்பார்கள். வழிகேட்டில் இருக்கும் மக்களுக்கு அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தூதர்கள் எச்சரித்துக்கொண்டே இருந்தார்கள்.“மனிதர்களே, இறைவனுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு மாறு செய்யாதீர்கள். மாறு செய்தால் இறைவேதனை வருவது நிச்சயம். இறைவேதனை வந்துவிட்டால் தப்பிக்கவே முடியாது” என்று அறிவுறுத்திக் கொண்டும் இருந்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்; இறைவனை ஏற்றுக் கொண்டு, அவனுடைய வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொண்டால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம் என்று நற்செய்தி சொல்பவர்களாகவும், இறைவனுக்கு மாறு செய்தால் ஈருலகிலும் கடும் வேதனைக்கு ஆளாவீர்கள் என்று எச்சரிப்பவர்களாகவும்தான் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். நன்றி – சிராஜுல்ஹஸன்

Related Articles

Back to top button
Close
Close