fbpx
Others

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்மக்களவை–ஒத்திவைப்பு..!!

 இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற மக்களவையை 2 முறை ஒத்திவைக்க நேரிட்டது. மாநிலங்களவை காலையில் கூடியதும் உரையாற்றிய அவை தலைவர் ஜெகதீப் தன்கர், உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கொரோனா பரவல் குறித்து எம்.பி.க்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்து நாட்டு மக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என்றும் தன்கர் தெரிவித்தார்.அவை நடவடிக்கைகள் தொடங்கிய போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சீனாவின் அத்துமீறல்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி இன்றும் முழக்கம் எழுப்பினர். விவாதம் நடத்தக்கோரி எதிர்கட்சிகளால் தரப்படும் நோட்டீஸ்களை தொடர்ந்து ரத்து செய்யும் அவை தலைவரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதனால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்துக்கு இடையே மாநிலங்களவை நடவடிக்கைகளை ஜெகதீப் தன்கர் தொடர்ந்து மேற்கொண்டார்.சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். மக்களவையிலும் இதே பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், முழக்கம் எழுப்பினர். குழப்பத்திற்கு இடையே அவையை நடத்த முயன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவின் முயற்சி பலனளிக்காததை அடுத்து மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பின்னர் அவை தொடங்கியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தை நிறுத்தவில்லை. குழப்பத்திற்கு இடையே சற்று நேரம் அவையை நடத்திய பொறுப்பு சபாநாயகர் ராஜேந்திர அகர்வால், பிற்பகல் வரை ஒத்திவைத்தார். ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button
Close
Close