fbpx
Others

ஆளுநரின் மோதல் போக்கு..! வலுக்கும் போராட்டம்..!கூடுதல்பாதுகாப்பு

 கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிண்டி உதவி ஆணையர் சிவா தலைமையில் வேளச்சேரி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிக்காமல் தமிழகம் என்று வாசித்தார். அதோடு, சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது என்பதை அவர் குறிப்பிடவில்லை. மேலும் சமூக நல்லிணக்கம், சமூக சீர்திருத்தத்திற்காக பாடுபட்ட தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றி குறிப்பிடவில்லை. மேலும், திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளையும் புறக்கணித்து தனது உரையை முடித்தார்.இதனை அடுத்து வரும் 12-ம் தேதி ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல்கட்சி தலைவர்கள் முதல் மாணவர்கள் வரை ஆர்.என்.ரவியின் செயல்பாட்டை கண்டித்து போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மெரினா காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ‘தமிழ்நாடு எங்கள் நாடு. புறக்கணிக்காதே’ என்று முழக்கம் எழுப்பியபடி தமிழக ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்களுடன் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினர். பிறகு கல்லூரி முதல்வர் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதேபோல தஞ்சை, கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close