fbpx
Others

ஆம்னி பேருந்து– உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என தமிழக போக்குவரத்து ஆணையர் கடந்த ஜன. 24-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்தவழக்குகளை விசாரித்தஉயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைத்துள்ள கேரேஜ்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், சூரப்பட்டு, போரூர் டோல்கேட்டுகளில் மட்டுமே பயணிகளை இறக்கி, ஏற்றலாம் என்றும், அதேபோல கண்டிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் செல்லாமல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடாது எனவும் கூறி வழக்கு விசாரணையை வரும் ஏப்.15-க்கு தள்ளி வைத்திருந்தார்.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்தும், போக்குவரத்து ஆணையரின் உத்தரவை எதிர்த்தும், கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரியும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி இடைக்கால உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளார். அதற்குள் இந்தவிவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும். ஏப்.15-ம் தேதி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்றனர்.மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவில் தலையிட முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.இதையடுத்து தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் நேற்று பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சூரப்பட்டு டோல்கேட், போரூர் டோல்கேட் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 3 இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப் படும்’’என எச்சரித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close