fbpx
Others

ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆளுநர்கள் அறிந்த அளவுகூட தற்போது உள்ளவர்கள்….

ஆங்கிலேயர் ஆட்சிக்கால ஆளுநர்கள் அறிந்த அளவுகூட, தற்போது உள்ளவர்கள் தமிழர் பண்பாட்டை அறியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.62.78 கோடியில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கில், 83,462 சதுர அடி பரப்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவுக்காக நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தார். அங்கிருந்து காரில் கீழக்கரை கிராமத்துக்கு வந்தபோது, வழிநெடுகிலும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.ஜல்லிக்கட்டு அரங்கம் முன் அமைக்கப்பட்டிருந்த ‘காளையை அடக்கும் மாடுபிடி வீரர்’ சிலை மற்றும் ஜல்லிக்கட்டு அரங்கைத் திறந்துவைத்த முதல்வர், ஜல்லிக்கட்டுப் போட்டியையும் தொடங்கிவைத்துப்பார்வையிட்டார். தொடர்ந்து, காளைகளை அடக்கிய வீரர்கள், சிறப்பாக விளையாடிய காளை உரிமையாளர்களுக்கு தங்கக் காசு, தங்க மோதிரம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசு அமைந்த 3 ஆண்டுகளில் தமிழரின் பழமையைச் சொல்லும் கீழடி அருங்காட்சியகம், கருணாநிதியின் பெயரால் மாபெரும் நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என மதுரையில் 3 முக்கிய கம்பீரச் சின்னங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். ஆனால், 2015-ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம் (எய்ம்ஸ்)தற்போதுவரைசெயல்படுத்தப்படவில்லை. இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழர் பண்பாட்டுச் சின்னம் மட்டுமல்ல, தமிழினத்தின் பண்பாட்டு மரபின் தொடர்ச்சியாகும். சிந்துசமவெளிக் காலத்து முத்திரைகளிலேயே திமில் காளைகள் இருக்கின்றன.   தை மாதம் தொடங்கி பொங்கலுக்காக முதல் 3 நாட்கள் அரசுகருவூலத்தைத்தவிர மற்ற பொதுஅலுவலகங்களை மூடவேண்டும் என்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆளுநர்கள் அறிவித்திருக்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டைச் சரியாக அறிந்தவர்களாக அந்தக்காலத்து ஆளுநர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது அப்படியில்லை.இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுவதும் பேசப்படும் என்றுதான், இந்த அரங்கை அமைக்கும் முடிவை எடுத்தோம். கருணாநிதிக்கு ஏறுதழுவுதல் போட்டி மேல் தனிப் பாசம் உண்டு. அதனால்தான், முரசொலியின் சின்னமாக ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார். 1974 ஜனவரிமாதம் சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியவர் கருணாநிதி.ஜல்லிக்கட்டு, ரேக்ளாரேஸ் போன்றவற்றுக்கு 2006-ல்உயர் நீதிமன்றம் தடை விதித்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதியளித்து அனுமதியைப் பெற்றவர் கருணாநிதி.2007-ல் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை முன்வைத்து வாதாடி, போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் திமுக ஆட்சியில்தான். ஆட்சி மாறியதும் 2014-ல் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது.2017-ல் இளைஞர்களின் போராட்டம் ‘மெரினா தமிழர் புரட்சி’ என்று சொல்லும் அளவுக்கு சென்னை கடற்கரையில் நடந்தது. அமைதி வழியில் போராடியவர்கள் மீது வன்முறையை ஏவி கூட்டத்தைக் கலைத்தது அப்போதைய அதிமுக ஆட்சி. பின்னர் தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு அதிமுக ஆட்சி அடிபணிந்தது. அதற்குப் பிறகு போட்டிகளை நடத்தினாலும், நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.ஒவ்வோர் ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு நாடகமாடியது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மத்திய அரசு, ”ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை.கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்த திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு வரவில்லை” என்று தெரிவித்திருந்தது. ஆனால்,திமுக அரசின் தீவிர முயற்சியால்தான் தற்போது தடையின்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பெற்றோம். இவ்வாறு அவர் பேசினார்.  விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, ரகுபதி, ராஜ.கண்ணப்பன், பெரிய கருப்பன், பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி. மற்றும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மதுரை ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close