fbpx
Others

அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு…

kejriwal-is-being-treated-like-a-terrorist-bhagwant-mannSupreme Court refuses to hear urgent plea Arvind Kejriwal custody extended

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை, அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா கடந்த 9-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், கேஜ்ரிவாலுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அமலாக்கத் துறை சமர்ப்பித்து உள்ளது. அவரை கைது செய்தது சட்டப்பூர்வமாக செல்லும் என்று தெரிவித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.கேஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் கூறும்போது, “இசிஐஆர்-ல் அர்விந்த் கேஜ்ரிவாலின் பெயர் இல்லை. குற்றப்பத்திரிகையிலும் அவரது பெயர் இல்லை. மக்களவைத் தேர்தலையொட்டி உள்நோக்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். எங்களது மனுவை, அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும்’’ என்று கோரினார்.அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “கேஜ்ரிவாலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. சட்டப்பூர்வமாகவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது’’ என்று தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கூறும்போது “மனு தொடர்பாக ஏப்ரல் 24-ம் தேதிக்குள் அமலாக்கத் துறை விளக்கம் அளிக்க வேண்டும். அடுத்த விசாரணை ஏப்ரல் 29-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தற்போது டெல்லி திஹார் சிறையில் உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் அவர் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கேஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவாஜா உத்தரவிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close