fbpx
Others

அதிமுக வேட்பாளர்கள் 32 பேர் புதுமுகங்கள்,வாரிசுகள் 5 பேர்….

அதிமுக வேட்பாளர்கள் 33 பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் இருமுறை போட்டியிட்டவர். மற்ற 32 வேட்பாளர்களும் புதுமுகங்கள். அதேபோல, 5 பேர் மருத்துவர்கள், 4 பேர் பொறியியல் பட்டதாரிகள், 2 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 4 பேர் வழக்கறிஞர்கள், 9 பேர் பட்டதாரிகள். அதேநேரத்தில், ஒருவர் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசுகள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராசுவின் மகன் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் மகன் பாபு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி. சவுந்தரம் மகன் ஆற்றல் அசோக்குமார் ஆகியோருக்கு வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது. .மாற்றுக் கட்சியினர்: ராயபுரம் மனோ (காங்கிரஸ்), சரவணன் (பாஜக), சிம்லா முத்துச் சோழன் (திமுக), பசிலியன் நாசரேத் (திமுக) ஆகியோர் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்கள். சிம்லா முத்துச்சோழன் 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தவர்.18 தொகுதிகளில் திமுகவுடன்..வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய 18 தொகுதிகளில் அதிமுக-திமுக நேரடியாக மோதுகின்றன.காங்கிரஸுடன் மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் களம் காண்கிறது. 8 தொகுதிகளில் திமுகவின் இதர கூட்டணிக் கட்சிகளுடன் மோதுகிறது. எஸ்டிபிஐ அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 34 வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.தென் சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவர்த்தன், கன்னியாகுமரி வேட்பாளர் பசிலியன், புதுச்சேரி வேட்பாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் மீனவர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கடற்கரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.‘திருச்சியில் மார்ச் 24-ல் வேட்பாளர்கள் அறிமுகம்’ – அதிமுக கூட்டணியில் அதிமுக 33 தொகுதிகள், தேமுதிக 5 தொகுதிகள் மற்றும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆட்சிமன்றக் குழு மூலம், வெற்றி வாய்ப்பு அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதி, மதத்தைப் பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்தும் அளிக்கும் வகையில் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால்தான், தொண்டர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பார்கள்.மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 பேர் மற்றும் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஆகியோர் வரும் 24-ம் தேதி திருச்சியில் நடைபெறும் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவார்கள்.கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். ஏற்கெனவே அதிமுகவினர் மீது மாநில அரசு லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் வழக்கு பதிவு செய்தது. மத்திய அரசு வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இப்போது அமலாக்கத் துறை மூலமாக சோதனை நடத்துகிறது.எம்ஜிஆர், ஜெயலலிதா போல பிரச்சினைகளை எதிர்கொண்டு, நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். எதையும் சட்டப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close