fbpx
Others

அட்டப்பாடி– வனப்பகுதியில் சாராயம் அதிரடி ரெய்டு.

பாலக்காடு:  அட்டப்பாடி வனப்பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,054 லிட்டர் ஊறல் மற்றும் 51 லிட்டர் கள்ளச்சாராயம் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி மற்றும் அகழி இன்ஸ்பெக்டர்கள் ரஜித், பிரேம்குமார் ஆகியோர் தலைமையில் கலால்துறை காவலர்கள் மல்லீஸ்வரன்முடி சிவராத்திரி திருவிழாவையொட்டி அட்டப்பாடி வனப்பகுதிகளில் சாராய வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். அட்டப்பாடி தாலுகாவில் கள்ளமலை ஊராட்சிக்குட்பட்ட கீழ் கக்கூப்படி ஊரிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, தண்ணீர் பாட்டில்களில் சாராயம் அடைக்கப்பட்டு கிடப்பதை கண்டுபிடித்தனர். மினரல் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் அடைப்பதுபோல சாராயத்தை அடைத்து பதுக்கியிருந்தனர். 72 அரை லிட்டர் பாட்டில்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 36 லிட்டர் சாராயத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதேபோல பாடவயல் ஊராட்சியில் பொட்டிக்கல் ஊரில் பல்வேறு இடங்களிலாக பிளாஸ்டிக் பேரலில் இருந்த 500 லிட்டர் ஊறல், 6 லிட்டர் சாராயம் ஆகியவற்றையும், மற்றொரு இடத்தில் பிளாஸ்டிக் பேரல், பிளாஸ்டிக் குடங்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த  554 லிட்டர் ஊறல், 9 லிட்டர் சாராயம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் மற்றும் கலால் துறையினரின் இந்த அதிரடி சோதனையின்போது மொத்தம் 1,054 லிட்டர் ஊறல், மற்றும் 51 லிட்டர் சாராயம் சிக்கியது. கேட்பாரற்ற நிலையில் கிடந்த அவற்றை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close