fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சொல்லுங்க.. ரஜினிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..? மத்திய அரசை ஒரு பிடி, பிடித்த சீமான்…!

Naam tamilar seeman condemns rajini and central government

சென்னை:

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும், ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாள் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அதில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ரஜினிகாந்தை குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது?

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? மத்திய அரசு தனது கீழுள்ள துறையின் பதவிகளுக்கு நியமனம் செய்கிறபோது ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடியென்ன? அவர் என்ன மத்திய அமைச்சரா? மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா? அவருக்கு எதற்கு நியமனச் செய்தியைக் கூற வேண்டும்?

அரசின் எவ்விதப் பதவியிலும் இல்லாத அவருக்கு எதற்கு அளப்பரிய முதன்மைத்துவம்? யார் கொடுத்த நெருக்கடி? ரஜினிகாந்த் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதானே! அதனைத் தாண்டி, மக்களோடு அவருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? அரசின் செயல்பாடுகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும், நிர்வாகச் சீரமைப்புகளுக்கும், நியமன முறைமைகளுக்குமென இவை யாவற்றிற்கும் துளியும் தொடர்பற்றவரை மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய ஒரு விவகாரத்தில் எதற்குக் குறிப்பிட்டுப் பதிவிட வேண்டும்?

அவரைக் கேட்டுத்தான் நியமனங்கள் நடக்கிறதா? ரஜினிகாந்தை திருப்திப்படுத்தத்தான் சந்திரசேகரனை இயக்குநராக நியமனம் செய்தார்களா? அவரை மகிழ்விக்கத்தான் இந்நியமனம் நடைபெற்றதா? இந்நியமனத்திற்குப் பின்னால் உள்ள பேரங்களும், அரசியல் அழுத்தங்களும் என்னென்ன? யாருக்காக நடந்தேறிய நியமனம் இது?

வெளிப்படைத்தன்மைத் துளியுமின்றி, தனிநபர்களை மகிழ்விக்கப் பரிந்துரைத்த நபரைப் பதவியில் அமர்த்தி அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட மத்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. ஆகவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாங்க் அவர்கள் நடிகர் ரஜினிகாந்துடனான தனது அலுவல் ரீதியான தொடர்புகளுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை நியமிப்பதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலையீடு இருப்பது அப்பட்டமாகத் தெரிவதால் அதில் உண்மை இருப்பின், தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்ட மத்திய அமைச்சர் உடனடியாகத் தனது பதவி விலக வேண்டும் என்று அந்த அறிக்கையில் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close