fbpx
Others

தண்டவாளம் விரிசலால் கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில்ரயில் சேவை பாதிப்பு..

கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் அனுப்பம்பட்டு – மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல், மீஞ்சூரில் சிக்னல் கோளாறு ஆகியவை காரணமாக, மின்சார ரயில் சேவை இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.சென்னை புறநகர் ரயில் சேவை இயக்கத்தில் முக்கியமான வழித்தடமாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரயில் தடம் உள்ளது. இத்தடத்தில் நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் வழங்கப்படுன்றன. தினமும் இந்த ரயில்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அனுப்பம்பட்டு – மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பாளர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சோதனைமேற்கொண்டார். அப்போது, இரண்டு ரயில் நிலைங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட இடத்தில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்தத் தகவலின் அடிப்படையில், கும்மிடிப் பூண்டியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஒரு மின்சார ரயில் மற்றும் இரண்டு விரைவு ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன.இதுதவிர, சில விரைவு ரயில்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி விரிசலை சரி செய்தனர். இதையடுத்து, ரயில் சேவை நண்பகல் 12.30 மணிக்கு மீண்டும் தொடங்கியது. இதற்கிடையில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக, மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன.தொடர்ந்து, சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு, ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல், சிக்னல் கோளாறு ஆகியவை காரணமாக, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

Related Articles

Back to top button
Close
Close