Others
சீமான்–‘திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி” ?
“ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழைவெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும்.” – சீமான் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாநகரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது.
மக்கள் மிக அடர்த்தியாக உள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் அடிப்படைக் கட்டுமானம் முறையாகச் செய்யப்படாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்ற கொடுந்துயரை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் நிகழ்கிறது என்றால், தற்போது தமிழ்நாட்டின் பிற நகரங்களும் அதேபோன்று மழை வெள்ளத்தில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருப்பது திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியாகும்.இயற்கைச் சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனைச் செய்யத் தவறி, தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கென ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழைவெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது என்பது திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் நிகழ்கின்ற ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும்.
எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களைப் போலல்லாது தமிழ்நாடு அரசு பன்மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மக்களையும், அவர்தம் உடமைகளையும் பாதுகாக்க வேண்டுமெனவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.