கோவையில் லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் ரமேஷ்குமார் கைது !

கோவை., ஏப்., 10 :கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மற்றும் இவரது மனைவியின் பாஸ்போர்ட் காலாவதியானதை அடுத்து பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தார். தொடர்ந்து அங்கு நடைமுறைகள் முடிந்து, காவல் நிலையத்தில் நேரில் சரிபார்ப்பு பணி மேற்கொள்ள வேண்டியிருந்தது. செல்வபுரத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ரமேஷ்குமார் என்பவர், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் எழுத்தராகவும், பாஸ்போர்ட் ஆவண சரிபார்ப்பு அலுவலராகவும் பணியாற்றி வந்தார். செட்டிபாளையம் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு விடுத்ததன் பேரில், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோர் காவல் நிலையத்துக்குச் சென்ற போது, தலைமைக் காவலர் ரமேஷ்குமார், பாஸ்போர்ட் ஆவண சரிபார்ப்புக்காக இருவருக்கும் தலா ரூ.500 என மொத்தம் ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார். கிருஷ்ணமூர்த்திக்கு பணம் தர விருப்பமில்லை. இதையடுத்து அவர் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாரளித்தார். இதையடுத்து ரமேஷ்குமாரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்ட போலீஸார், ரசாயனம் தடவிய பணத்தாள்களை கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்தனுப்பினர். அதன்படி, பணத்தை பெற்றுக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி, 09.04.2025 அன்று செட்டிபாளையம் காவல் நிலையத்துக்குச்சென்றார். அங்கு தலைமைக் காவலர் ரமேஷ்குமாரிடம் பணம் கொடுத்தார். லஞ்ச பணத்தை ரமேஷ்குமார் வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரமேஷ் குமாரை கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாவட்ட போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்ட நிருபர்
க.அஜித் குமார்