fbpx
Others

பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் ஐ.பி.எஸ் ராஜினாமா


  கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரவீந்திரநாத். ஆந்திராவை சேர்ந்த இவர் 1989-ம் ஆண்டு ஐ.பி.எஸ். குழுவை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குனரக டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ரவீந்திரநாத்தை அரசு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்தது. அவர் கர்நாடக மாநில போலீஸ் பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
  மேலும் அமலாக்க இயக்குனரக புதிய டி.ஜி.பி.யாக அருண் சக்கரவர்த்தி நியமிக்கபட்டு இருந்தார். இந்த பணியிட மாற்றத்தால் ரவீந்திரநாத் கடும் அதிருப்தி அடைந்தார்.
  இந்த நிலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்த ரவீந்திரநாத், அங்கு டி.ஜி.பி. பிரவீன் சூட்டை சந்தித்து பேசினார். அப்போது, என்னை பணியிட மாற்றம் செய்து சிலர் பழிவாங்கி விட்டதாக கூறியதுடன், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறிவிட்டு புறப்பட்டு சென்று இருந்தார். இந்த நிலையில் கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாரிடம் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ரவீந்திரநாத் கொடுத்தார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-
  எஸ்.சி., எஸ்.டி. (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995-ன் படி பாதுகாப்பு பிரிவு அமைக்க அரசாணை பிறப்பிக்கும்படி கர்நாடக தலைமை செயலாளர் ரவிக்குமாரிடம் தான் கோரிக்கை விடுத்த போது, அவர் வெளிப்படை தன்மை காட்டதை கண்டு மனவேதனை அடைந்தேன். போலி சான்றிதழ் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததால், என்னை துன்புறுத்த இடமாற்றம் செய்து உள்ளனர்.
  இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
  ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்வது இது முதல் முறை அல்ல. 4-வது முறை. கடந்த 2008-ம் ஆண்டில் அப்போதைய நிர்வாக பிரிவு டி.ஜி.பி.யாக இருந்த உமாபதியின் நடவடிக்கை பிடிக்காமல் ரவீந்திரநாத் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். பின்னர் 2014-ம் ஆண்டு பெங்களூருவில் ஒரு ஓட்டலில் இளம்பெண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்தது தொடர்பான சர்ச்சையில் அப்போதைய பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர் பங்கு இருப்பதாக கூறி ரவீந்திரநாத் ராஜினாமா செய்து இருந்தார்.
  பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு தனது ஜூனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியதாகவும், தனக்கு வழங்கவில்லை என்று கூறியும் 3-வது முறையாக ரவீந்திரநாத் ராஜினாமா செய்தார். இந்த 3 முறையும் அவர் தனது ராஜினாமாவை திரும்ப பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையும் அவர் ராஜினாமாவை திரும்ப பெறுவாரா? அல்லது தனது முடிவில் உறுதியாக இருப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

Related Articles

Back to top button
Close
Close