fbpx
Others

காகிதம் இல்லாஇடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல்

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபிறகு முதல் பட்ஜெட்

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தது. தனது புதியஅரசின் இடைக்கால பட்ஜெட்டை ஆகஸ்டு 13-ந்தேதி தாக்கல் செய்தது.
இந்த நிலையில், 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.
இன்றுகாலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். அவரது உரை சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் என தெரிகிறது. இந்த பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு, இன்னும் நிறைவேற்றப்படாத திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது.
குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி இருப்பதுபோல, தனியாக மாதம் 2 முறை வெளியாகும் கல்வி பத்திரிகையும் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இதேபோல், மேலும் பல அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
இன்றைய பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், வேளாண் பட்ஜெட்டை என்றைக்கு தாக்கல் செய்வது?, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
இன்று (சனிக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். தி.மு.க. ஆட்சியில்தான் வேளாண்மைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
வரும் 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் என தெரிகிறது. இந்த விவாதம் 3 நாள்கள் நடக்கும் என்றும், வரும் 24-ந்தேதி (வியாழக்கிழமை) பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
அதன்பிறகு, 2 நாள் பயணமாக வரும் 25, 26 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் செல்ல இருக்கிறார். அங்கு 192 நாடுகள் பங்கேற்கும் தொழில் கண்காட்சியில் அவர் கலந்து கொள்கிறார். முதல்-அமைச்சராக அவர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாடு செல்ல இருக்கிறார்.
அதன்பிறகு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி டெல்லியில் புதிதாக திறக்கப்பட உள்ள தி.மு.க. அலுவலக திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். அதன்பிறகு, தமிழக சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கி, துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
அனேகமாக, ஏப்ரல் 4-ந்தேதி முதல் மானியக் கோரிக்கை விவாதம் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த விவாதம் ஒரு மாதத்திற்கு மேல் நடக்கும் என்று தெரிகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு, முதல் முறையாக சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரம், முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனை போன்றவை குறித்தும் பிரச்சினை எழுப்பும் என தெரிகிறது. எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது.

Related Articles

Back to top button
Close
Close