fbpx
Others

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை

 முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை; அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என்று ஆதாரங்களை தாக்கல் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகியான ஸ்ரீனிவாசன், கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். முரசொலி அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முரசொலி நிலம் தொடர்பான வருவாய்துறையின் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமண்லால் ஆஜராகி, ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்து பார்வதி மாதவன் நாயர் என்பவர் வாங்கி அஞ்சுகம் பதிப்பகத்துக்கு விற்றுள்ளார் என்று கூறி ஆவணங்களை நீதிபதி முன்பு தாக்கல் செய்தார். எனவே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லை; அஞ்சுகம் பதிப்பகம்தான் நிலத்தின் உரிமையாளர் என்று ஆவணங்களை சமர்ப்பித்தார். முரசொலி அறக்கட்டளை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், 2019ல் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியும், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத்தான் உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்து வருவதாக வாதிட்டார். மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டபோது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் என்ன செய்தது? எனவும் முரசொலி தரப்பில் கேள்வி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுதேசன் ஆஜராகி, நில உரிமை யாருக்கு என ஆணையம் முடிவெடுக்காது; ஆனால் நிலம் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதா? என ஆய்வு செய்ய மட்டுமே ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close