fbpx
Others

காங்கிரஸ் TO பாஜக விஜயம் செய்த விஜயதரணி…..

 

தேர்தல் நேரத்திலெல்லாம் கட்சி மாறப்போவதாகச் சொல்லிபரபரப்பைக் கிளப்பும் காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ-வான விஜயதரணி இம்முறை அதை செயலில் காட்டியே விட்டார்.

சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்டிவாக செயல்படுபவர் விஜயதரணி. கட்சிக் கூட்டங்களிலும், சட்டமன்றக் கூட்டத்திலும் தவறாமல் கலந்து கொள்ளக்கூடியவர். அப்படிப்பட்டவர், அண்மையில் தமிழக சட்டமன்றம் கூடிய போது டெல்லியில் இருந்தார்.வழக்கு ஒன்றுக்காக அவர் டெல்லி சென்றிருப்பதாக விஜயதரணி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தலைமை மீது உள்ள அதிருப்தியால் டெல்லி சென்றுள்ள அவர், அங்கு பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசிவருகிறார் என்று தமிழகத்தில் செய்திகள் பரவின. அதை அவர் உறுதியாக மறுக்காத நிலையில் காங்கிரஸ் தரப்பிலும் இதுகுறித்த பெரிதான விவாதங்களோ, கவலைகளோ இல்லை.

விஜயதரணிக்கு அப்படி என்ன அதிருப்தி… பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த அவருக்கு காங்கிரஸ் கொள்கைகளுக்கு நேர்மாறான பாஜகவில் இணைய வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்பது குறித்தெல்லாம் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.விஜயதரணிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த புறக்கணிப்புகள், அவமானங்கள் குறித்து அவர்கள் விரிவாகப் பேசினார்கள்.”விஜயதரணியை நம்பவைத்து ஏமாற்றுவதே காங்கிரஸ் கட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது. 2019 மக்களவைத் தேர்தலின் போது விஜயதரணி கன்னியாகுமரி தொகுதியில் சீட் கேட்டார். அவருக்கு மறுத்துவிட்டு வசந்தகுமாருக்கு தந்தார்கள். வசந்தகுமார் மறைவுக்குப் பிறகு வந்த இடைத் தேர்தலிலும் சீட் கேட்டார் விஜயதரணி. ‘நிச்சயம் தருகிறோம், விஜய் வசந்துக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் உங்களது விளவங்கோடு தொகுதியில் சீட் கொடுத்து விடலாம்’ என்று தலைமையில் சொன்னார்கள். ஆனால், விஜய் வசந்திடம் வேண்டியதைப் பெற்றுக் கொண்டு அவருக்கே கன்னியாகுமரிக்கு சீட் கொடுத்து விட்டார்கள். அப்போதே விஜயதரணி மிகவும் அப்செட்.அத்தோடு விடவில்லை… கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் விஜயதரணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என கட்சிக்குள் சில பேர் கலகம் செய்தார்கள். அதையும் மீறித்தான் சீட் வாங்கி போட்டியிட்டு வென்றார். அந்த சமயத்தில் சீனியரான தனக்குத்தான் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் பதவி தரப்படும் என பெரிதும் எதிர்பார்த்தார் விஜயதரணி. ஆனால், அவரைப் புறந்தள்ளிவிட்டு பல கட்சிகள் மாறி வந்த செல்வப்பெருந்தகைக்கு அந்தப் பதவியைக் கொடுத்தார்கள். கட்சியின் இந்த முடிவால், அதிமுக ஆட்சியில் பேரவையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த விஜயதரணி கூட்டணித் தோழனான திமுக ஆட்சியில் பின் வரிசைக்குத் தள்ளப்பட்டார். இதுவும் அவருக்கு பெரும் உறுத்தலாக இருந்தது.இந்தநிலையில், இம்முறையாவது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் எனக்கு சீட் கொடுங்கள் என தலைமையிடம் கேட்டார் விஜயதரணி. அதற்கு அவரை அலட்சியப்படுத்தும் விதமாக தலைமை பதில் சொன்னது. அந்த அதிருப்தியில் தான் அவர் டெல்லிக்குச் சென்றார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியில் இருந்த அவரை அழைத்துப் பேசவோ, சமாதானப்படுத்தவோ காங்கிரஸ் மேலிடமும் முயற்சி செய்யவில்லை.மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன்... 'கை'க்கு பை சொன்ன விஜயதரணி!

விஜயதரணியை விட்டுவிடக்கூடாது என தலைமை நினைத்திருந்தால், மாநிலத் தலைவர் பதவியையாவது அவருக்கு கொடுத்திருக்கலாம். அதற்கு எல்லா வகையிலும் அவர் தகுதியானவர். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி. ஆனால், அவருக்குரிய முக்கியத்துவத்தை, கௌரவத்தை காங்கிரஸ் கட்சி வழங்கத் தவறிவிட்டது.

காங்கிரஸ் தலைவர் பதவிதான் தரவில்லை… சரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியையாவது அவருக்குக் கொடுத்திருக்கலாம்; அதையும் கொடுக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயதரணிக்கு சீட் தரக்கூடாது என்றும் இப்போதே காங்கிரசுக்குள் சிலர் பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவருகே விஜயதரணிக்கு எதிராக குறிவைத்து வேலைபார்த்தார்கள்.அவரை இப்படி தொடர்ச்சியாக ஏமாற்றி உதாசீனம் செய்தார்கள். அதனால் ஏற்பட்ட அதிருப்தியில் கடந்த ஒரு வருடமாகவே அமைதியாகி விட்டார் விஜயதரணி. இனியும் இந்தக் கட்சியில் இருந்தால் தனக்கு மரியாதை இல்லை என்ற முடிவுக்கு வந்த அவர், இதை தனக்கான தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பாஜகவில் இணைந்திருக்கிறார்” என்றனர் விஜயதரணிக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்த காங்கிரஸார்.விஜயதரணி அதனால் தான் பாஜகவில் இணைந்தாரா என்று கேட்டதற்கும் விளக்கமாக பதில் சொன்ன அந்த வட்டத்தினர், ” காங்கிரஸ் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரப்போவ தில்லை. காங்கிரசுக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் காங்கிரஸ் போல இன்னொரு தேசிய கட்சிக்கு சென்றாலும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்தார் விஜயதரணி. தனக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்பதால் தான் அவர் பாஜகவில் இணைந்திருக்கிறார்” என்றனர்.

 பாஜக பிரவேசம் குறித்து விஜயதரணியிடம் பேசியபோது, “நான் மிகுந்த புறக்கணிப்பிலும், மன உளைச்சலிலும் இருந்தேன். ஆரம்பத்தில், என்ன முடிவை எடுப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் நான் புறக்கணிக்கப் பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் அதையெல்லாம் நான் இப்போது கிளற விரும்பவில்லை. நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்.இளம் பிராயத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த நான் முதல் முறையாக இன்னொரு தேசியக் கட்சிக்கு மாறி இருக்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் தேசத்தில் நல்லாட்சி நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பாஜகவில் பெண்களுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கிறார்கள். தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் வேகமாக வளர்ந்து வருகிறது. எந்த உத்தரவாதமும் வாங்கிக் கொண்டு நான் பாஜகவில் இணையவில்லை. என்றாலும் காங்கிரஸ் கட்சியில் உதாசீனப்படுத்தப்பட்ட எனக்கு பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல் ஆளாக விஜயதரணி எம்எல்ஏ பாஜகவில் இணைந்திருக்கிறார். இவரைத் தொடர்ந்து இன்னும் பலரையும் தங்கள் பக்கம் இழுக்க பேசிவருகிறது பாஜக. தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொள்ளும் பலரும் விஜயதரணி ரூட்டில் பாஜகவுக்கு பயணிக்கலாம்!

 

Related Articles

Back to top button
Close
Close