fbpx
Others

உரமூட்டைகளை வீடுகளில் பதுக்கி விற்பனை—கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு

*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
 திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் உரக்கடைகள் வைத்து நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, பெட்டிக்கடை, வீடுகளில் ரசாயன உரங்களை பதுக்கி வைத்து விற்பதால் காற்று மாசு அடைந்து கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது’ என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஆர்.ஓ. உறுதி அளித்தார்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறை தீர்வுக்கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர்.விவசாயி: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆண்டியப்பனூர் அடுத்த செப்பேடு ஏரிக்கால்வாய், பொம்மிகுப்பம், ஜோனான்றாம்பள்ளி அருகேயுள்ள அங்காடி குட்டை ஏரிக்கால்வாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளன. அவற்றை அகற்ற வேண்டும்.
டிஆர்ஓ: மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விவசாயி: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உரக்கடைகளில் ஒரு சில இடங்களில் உரிமம் இல்லாமல் இயங்கி வருகிறது. வேளாண் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும்.சில உரக்கடைகளுக்கு கிடங்கு வசதி இல்லாததால் வீடுகளில் உரமூட்டைகளை இருப்பு வைத்துவிற்பனை செய்து வருகின்றனர். வீடுகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உரத்தில் இருந்து வெளியேறும் காற்று மாசால் பல கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, உடல்நலக்குறைபாடு, குழந்தையின்மை போன்ற பிரச்னைகள் எழுகிறது.
டிஆர்ஓ: எந்த பகுதியில் உரம் வீடுகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என முழு முகவரியுடன் புகார் அளித்தால், உடனடியாக ஆய்வு நடத்தி வீடுகளில் இருப்பு வைத்துள்ள உர மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல, உரிமம் இல்லாத உரக்கடைகள் குறித்த ஆய்வினை வேளாண் அதிகாரிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி: மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 12 மணிக்கே கூட்டத்தை முடித்து வருகின்றனர். அதனால் விவசாயிகள் தங்கள் குறைகளை சொல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மற்ற மாவட்டங்களில் ஒரு மணி வரை விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் நடைபெறுகிறது.
டிஆர்ஓ: விவசாயிகளுக்கான கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பேசி தங்கள் குறைகளை தெரிவிக்க வேண்டும்.விவசாயி: ஜவ்வாது மலை புங்கம்பட்டு நாடு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை இல்லாமல் வருடத்திற்கு கால்நடைகளுக்கு இரண்டு முறை நோய் தொற்று ஏற்பட்டு ஜவ்வாது மலைப்பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க இந்த பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். நாங்கள் கால்நடை மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருப்பத்தூருக்கு வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
டிஆர்ஓ: கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஜவ்வாது மலையில் ஆய்வு செய்து கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி: கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தில் உள்ள செயலர்கள் பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பயிர் கடன் பெற விவசாயிகள் சென்றால் அதற்கு 7 வங்கிகளில் தடையில்லா சான்று வேண்டும் என்று அலையவைக்கின்றனர்.டிஆர்ஓ: கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு உரிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: திருப்பத்தூர் ஒன்றியம் பூங்குளம் கிராமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. வரவு-செலவு கணக்குகளை கிராம சபா கூட்டத்தில் கேட்டால் ஊராட்சி மன்ற தலைவர் கொடுக்க மறுக்கின்றனர்.டிஆர்ஓ: ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி: பூமிக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஜோன்றம்பள்ளி ஏரிக்கால்வாய் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அங்கன் குட்டை ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிஆர்ஓ: உடனடி ஆய்வு மேற்கொண்டு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: வாணியம்பாடி பாலாற்று பகுதி ஓரம் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் மாசு அடைந்து காணப்படுகிறது. இதற்கு தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியேறி காரணமாகும்.
டிஆர்ஓ: கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு உரிய தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி; திருப்பத்தூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் காட்டுப்பகுதிகளில் 18 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்பத்தூர் அடுத்த ஏழருவி பகுதியில் உள்ள தடுப்பணை உடைந்து உபரி நீர் வீணாக செல்கிறது. இதனை தடுக்க வனத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
டிஆர்ஓ: வனத்துறையினர் ஏழருவி பகுதியை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அங்கு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.இதேபோன்று விவசாயிகள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், வேளாண்ணை துணை இயக்குநர் பச்சையப்பன், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி (திருப்பத்தூர்), பிரேமலதா (வாணியம்பாடி), தோட்டக்கலை துணை இயக்குநர் பாத்திமா, முன்னோடி வங்கிகளின் மேலாளர் அருண்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின், ஆர்டிஓ வளர்மதி பேசுகையில், ‘‘விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் விவசாயிகளுக்காக நடைபெறும் கூட்டமாகும். இதில் பல்வேறு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். பணிகள் உடனுக்குடன் செய்த அதிகாரிகளை விவசாயிகளே கைதட்டி பாராட்டினர். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இதுபோல் விவசாயிகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அதேபோல் உங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் என்றும் உறுதுணையாக இருக்கும். விவசாய குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close