fbpx
Others

ராமர் கோயில்–அமித்ஷாவுக்கு காங். தலைவர் கார்கே கேள்வி

 அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமான பணிதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. கோயில் திறப்பு குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கேள்வியும் எழுப்பி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1ம் தேதிக்குள் தயாராகி விடும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் கூறினார். இதுதொடர்பாக ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று அளித்த பேட்டியில், ‘ராமர் கோயில் கட்டுமான பணி உரிய நேரத்தில் முடிவடையும்.
வருகிற டிசம்பர் மாதம் பணியை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோயிலை திறக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தியன்று கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும். தொடர்ந்து கோயில் திறக்கப்படும். டிசம்பர் மாதமே கோயில் திறப்பு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்’ என்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘பாஜக தலைவர்கள் வாக்குகளை பெறுவதற்காக எதை வேண்டுமானாலும் கூறுகிறார்கள்.
ராமர் கோயில் திறப்பு குறித்து அறிவிப்பதற்கு அவர்கள் யார்? நீங்கள் (அமித் ஷா) ராமர் கோயிலின் அறக்கட்டளை தலைவரா? நாட்டைப் பாதுகாப்பது தான் உங்களுடைய பணி’ என்று காட்டமாக கூறினார். இதற்கிடையில், ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில், முதல் முறையாக கோயில் கட்டுமான பணிகள் முதல் கோயிலுக்குள் நுழையும் இடம் வரையிலான வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமஜென்மபூமி நிர்வாகிகள் கூறுகையில், ‘அயோத்தி கோயிலில் ராமரின் புதிய சிலைகள் நிறுவப்படும்.
இந்த சிலையானது ராமரின் குழந்தை பருவத்தை குறிக்கும் வகையிலும், ஐந்து அடி உயரமும் இருக்கும். வெள்ளை பளிங்கு கற்களால் செய்யப்பட்டிருக்கும். ராஜஸ்தானின் மக்ரானாவில் சிலையமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த 70 ஆண்டுகளாக வழிபடப்பட்டு வரும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படாது’ என்று கூறினார். இன்றைய நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்கு பொதுமக்கள் சென்று பார்க்க முடியாது. நான்கு அடுக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுமான பணிகள் தொடர்பான வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close