fbpx
Others

ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித்ஷாவுக்கு எதிரான மம்தா பானர்ஜி

 ஒன்றிய பாஜக அரசு, மோடி, அமித் ஷாவுக்கு எதிராக பேசிவந்த மம்தா பானர்ஜியின் ஆக்ரோஷ அரசியல் தற்போது மென்மையானதாக கூறப்படுகிறது. இதற்கு சமீபத்திய அரசியல் நிகழ்வுகள்தான் காரணம் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த 2021ல் மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. தனது கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் நந்திகிராம் தொகுதியில் 1,737 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்த சுவேந்து அதிகாரி, பாஜக பக்கம் சாய்ந்ததால் தற்போது வரை இருவருக்கும் கடுமையான மோதல்கள் இருந்து வருகின்றன. பேரவை தேர்தலுக்கு பின்னர் நடந்த வன்முறை சம்பவங்களால், பாஜக – திரிணாமுல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேற்குவங்கத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பாஜக தலைமையும், திரிணாமுல் கட்சியும் ஒன்றை ஒன்று தாக்கி வந்தன. இந்த நிலையில் சமீப காலமாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக மம்தா பானர்ஜி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசுவதில்லை.இதற்கு காரணம் சமீபத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகளை குறிப்பிடலாம். அதாவது முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமித் ஷாவை சந்தித்தார். அப்போது இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டனர். கடந்த மாதம் டெல்லி சென்ற மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை  விரிவுபடுத்துவதற்கான முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை  ஏவப்படுவதாக எழும் விமர்சனங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை என்று  மம்தா பானர்ஜி கூறினார்.அதனால் பாஜக தலைவர்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மம்தா பானர்ஜி மென்மையாக கையாள்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மம்தாவின் அமைதிக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில், மேற்குவங்க மாநிலத்திற்கு தேவையான ஒன்றிய அரசின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்கவும், மாநில அரசின் நிதி சுமையைக் குறைக்க ஒன்றிய அரசின் உதவியை சார்ந்து இருக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திரிணாமுல் கட்சியை சேர்ந்த சில அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மம்தாவின் உறவினர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் பல வழக்குகளை பதிவு செய்துள்ளது.  அவர்கள் விசாரணை வளையத்தில் இருப்பதால், மம்தாவிற்கு அரசியல் ரீதியான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மம்தா பானர்ஜி ஒன்றிய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக கருத்துகள் கூறுவதை குறைத்துக் கொண்டார். அதேநேரம், அவரது கட்சியை சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் கடுமையாக சித்தாந்த ரீதியாக கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எப்படியாகிலும் வரும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி போன்ற முதல்வர்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்க மறுப்பதால், மக்களவை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து தேசிய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close