சென்னையில் திடீர் மழை மக்கள் பெரு மகிழ்ச்சி!!!
சென்னை:
சென்னையில், வெப்ப சலனத்தால், நேற்று திடீர் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இதனால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.வட கிழக்கு பருவ மழை, ஜனவரியில் முடிவுக்கு வந்த பின், ஐந்து மாதங்களாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், வெயில் கொளுத்தி வந்தது.
கடந்த, 28ம் தேதி, கத்திரி வெயில் முடிந்தும், வெயில் அளவு அதிகரித்து காணப்பட்டது. சென்னை விமான நிலையம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட பதிவுகளின் படி, வெயில் அளவு, 40 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று வெயில் அளவு அதிகமாக இருந்தது. குறிப்பாக வெப்பத்தின் தாக்கமும், காலை முதல் கடுமையாக இருந்தது. அதனால், மாலையில் வெப்ப சலனத்தால் மழை பெய்யலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பிற்பகல், 2:45 மணி அளவில், திடீரென மேகங்கள் ஒன்று கூடி, மழை கொட்டியது.
அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, அடையாறு, பாரிமுனை, திருவொற்றியூர், செங்குன்றம், ஆவடி, பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 20 நிமிடங்கள் வரை, மழை கொட்டியது.
சாலைகளில் வெள்ளம் திடீர் மழையால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்களில், நீர் நுழைவதற்கான துளைகள் அடைபட்டிருந்ததால், சாலையிலேயே நீர் தேங்கி, வெள்ளமாக காட்சியளித்தது.மழை நீரில், வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கு பின், மழை நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய துவங்கியதும், நிலைமை சீரானது.நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில், 2.௭ செ.மீ., மற்றும் சென்னை விமான நிலையத்தில், 2.1 செ.மீ., மழை பதிவானது.
இதே போல் புறநகர் பகுதிகளான நாவலூர் , கேளம்பாக்கம் , கோவளம் ,போன்ற பகுதிகளிலும் ஒரு மணிநேரம் நல்ல மழை பெய்தது.
இன்றும், மாலை அல்லது இரவு நேரங்களில், மழைக்கு வாய்ப்புஉள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.