fbpx
Others

கிரீன் நீடாசுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்—செய்தி

சூற்றுச்சூழலைக் காக்க டெல்லியைப் போன்று தமிழகத்திலும் வெடி வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  காலநிலை மாற்றத்தினால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. வெயில் தாக்கம் பன்மடங்கு உயர்ந்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. பல்லூயிர் பெருக்கம் தடைப்படுகிறது. மேக வெடிப்பு, மேகத் திரள், வெப்பச்சலனம் போன்றவற்றால் பல மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு மணி நேரங்களில் கொட்டிக் தீர்த்து விடுகிறது. பனிப்பொழிவு காலங்களில் கார் முதல் ஆகாய விமானம் சேவை வரை பாதிப்படைகிறது. நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று ஏற்கனவே மாசடைந்த நிலையிலேயே இருக்கிறது இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்கும் போது இந்த மாசு மேலும் பன்மடங்காகி குழந்தைகள், வயதானவர்கள் பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்பதாலேயே தமிழக அரசு வெடி வெடிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் என இரண்டு மணி நேரம் அனுமதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த இரண்டு மணி நேர அனுமதி ஒவ்வொரு ஆண்டும் உத்தரவாக பிறப்பிக்கப்பட்டும் நடைப்படுத்தாமல் இருந்து வருகிறது. வெடியால் ஏற்படுகின்ற மாசு குறித்து உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைக் கொண்டு பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். வெடி வெடிப்பது என்பது நம்முடைய சமயத்தில், பண்பாட்டில், கலாச்சாரத்தில் ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்கவில்லை. மறக்கவில்லை. பண்பாட்டை விட, கலாச்சாரத்தைவிட, சமயத்தைவிட நம்முடைய குழந்தைகள், மூத்தோர் முக்கியமானவர்கள். அதைவிட முக்கியம் அனைத்துயிர்கள். நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற மாசு இல்லாத இயற்கையை நம் சந்ததியினருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் விட்டு செல்ல நாம் அனைவரும் இந்த தீபத்திருநாளில் சூளுரைப்போம். சுற்றுச்சூழல் மாசை தடுக்க டெல்லியைப் போன்று தமிழ்நாட்டிலும் வெடி வெடிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close