fbpx
Others

பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் அவல நிலை…!

நிர்வாகச் சீரமைப்பு என்ற பெயரில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் சமீபத்தில் நடைபெற்ற அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல சில மாற்றங்களால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில்பணியாற்றி வரும் ஆசிரியர்களும் ஊழியர்களும் தான். அவர்கள் இன்று வரை அக்டோபர் மாதத்திற்குரிய ஊதியத்தைப்பெற முடியாத வேதனையில் மூழ்கியுள்ளனர். ஊதியப் பட்டியல் காலதாமதமாக மாவட்ட கல்வி அலுவலகம் அனுப்பி வைத்த பள்ளிகள் இன்னும் செப்டம்பர் மாதம் ஊதியம் பெறப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயமே. இந்த அவலநிலை உயர் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தான் ஏற்பட்டதே தவிர இயற்கையாக ஏற்பட்டதில்லை….அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகி அதில் குளிர் காயும் ஒரு சில அதிகாரிகளே இதற்கு காரணம் என்று ஆசிரியர்கள் மத்தியில் பேச்சு அடிபட்டு வருகிறது. ஆசிரியர்கள் கையில் ஒரு மாத ஊதியம் கூட கையிருப்பு இல்லையா என்ற ஏளனப் பேச்சு வேறு. பன்னிரண்டு மாத ஊதியத்தில் ஒரு மாத ஊதியம் வருமான வரியாக போய் விடுகிறது. மற்றும் ஒரு மாத ஊதியம் பங்களிப்பு ஓய்வூதியதிற்கு(மாதம் 10 சதவீதம்) போய் விடுகிறது. இதற்கு மேல் பணிக்கு சென்று வர போக்குவரத்து செலவு, வீட்டுக்கு வாடகை, குழந்தைகளுக்கு கல்விச் செலவு, குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள் இன்னும் இத்தியாதி செலவுகள்… உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பது முதுமொழி, அது இப்போது அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர்களுக்கும் பொருந்துகிறது.எது எப்படியோ நிலைமை இந்த வாரம் வெள்ளிக்கிழமை சீரடைந்து விடும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி அளித்திருப்பது
என்பது கொஞ்சம்ஆறுதல் அளிக்கிறது.இந்த வாரம் வெள்ளிக்கிழமை (18/11/2022)க்குள் ஊதியம் கிடைத்தால் பார்ப்போம். இல்லையேல் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆசிரியர்- அலுவலர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மிகுந்த வேதனையோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு இன்னும் காலத்தை நீடிக்காமல் உடனடியாக ஊதியம் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
இவண்:
எஸ்பி.பழனிவேலு,
மாநில தலைவர்.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம்

Related Articles

Back to top button
Close
Close