fbpx
Others

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.,புயலை கிளப்பும்விவகாரங்கள்…..

மக்களவை தேர்தலை குறிவைத்து 26 எதிர்க்கட்சிகளும், பாஜ கூட்டணி கட்சிகளும் ஒரே நாளில் போட்டிக் கூட்டம் நடத்திய நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஏவி விடுவது, ஆளுநர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் நாடாளுமன்றத்தில் புயல் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.    அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு ‘இந்தியா’ (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. அதே நாளில் ஆளும் பாஜ கட்சி 38 உதிரிக் கட்சிகளை இணைத்து டெல்லியில் போட்டிக் கூட்டம் நடத்தியது. இதனால் மக்களவை தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள பரபரப்பான சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்க உள்ளது. இக்கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் அவசர சட்டத்திற்கான மசோதாவை இயற்ற முன்னுரிமை கொடுத்துள்ளது. இதுதவிர பொது சிவில் சட்ட மசோதாவும் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்தார். பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணையமும் பொதுமக்கள் கருத்தை கேட்டு வருகிறது. ஆனால் மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை கொண்டு வருவது குறித்து ஒன்றிய அரசு இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காக்கிறது.  மேலும், தனிநபர் தரவு பாதுகாப்பு, வன பாதுகாப்பு சட்டங்களை திருத்துவதற்கான மசோதாக்கள், ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா மற்றும் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா, திருட்டி விசிடி தடுப்பதற்கான வரைவுச் சட்டம், வயது அடிப்படையிலான சென்சார் சான்றிதழ் வகைகளை அறிமுகப்படுத்துதல், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை அமைப்பது போன்ற மசோதாக்களையும் தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.அதே சமயம், எதிர்க்கட்சிகளை பொறுத்த வரையில், மணிப்பூர் கலவரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விசாரணை அமைப்புகளை ஏவி விடுதல், ஆளுநர்களின் அதிகார மீறல்கள், விலைவாசி உயர்வு, ஒடிசா ரயில் விபத்து, நாடெங்கும் வெள்ளப்பெருக்கு போன்ற பல விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. இதனை நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் உறுதிபடுத்தி உள்ளன. நாடாளுமன்றம் கூடுவதையொட்டி, அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு கோரி ஒன்றிய அரசு தரப்பில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘மணிப்பூர் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் அனைவரின் கோரிக்கை. அங்கு கலவரம் தொடங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ஆனால் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காமல் உள்ளார். குறைந்தபட்சம் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கை விடுத்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும். மணிப்பூரில் நிலைமை மோசமடைந்து வருவதால் நாளை (இன்று) அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். கைதட்டுவதற்கு இரண்டு கைகள் தேவை. எனவே, ஆளும் கட்சி நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த விரும்பினால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். அனைத்து பிரச்னைகளையும் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கோரினோம்’’ என்றார்.  இதற்கு பதிலளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அளித்த பேட்டியில், ‘‘மணிப்பூர் கலவரம் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் அவை நடைமுறைக்கு உட்பட்டு விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது’’ என்றார். எனவே, மழைக்கால கூட்டத் தொடரின் இன்றைய முதல் நாளில் இருந்தே விவாதங்கள் அனல் பறக்கும் என்பது நிச்சயம். மழைக்கால கூட்டத் தொடரின் முதல் பாதி கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், மீதி கூட்டம் புதிய நாடாளுமன்றத்திலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. * முதல் முறை இந்தியா கூட்டணி ஆலோசனை
இந்தியா எனும் புதிய கூட்டணி தொடங்கப்பட்ட பின், 26 எதிர்க்கட்சிகளும் முதல் முறையாக இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளன. நாடாளுமன்றத்தில் வகுக்க வேண்டிய உத்திகள், வியூகங்கள் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அறையில் இன்று காலை ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 26 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close