fbpx
Others

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் புதுவை

நகரமெங்கும் போக்குவரத்து நெரிசல்
புதுவை நகரமெங்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையில் பொதுப்பணித்துறையும், காவல்துறையும் பாராமுகமாக நடந்துகொள்வது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் கடலூர் சாலையானது பாரதி மில்லுக்கு சொந்தமான இடத்தை எடுத்து அகலப்படுத்தப்பட்டது. மரப்பாலம் சந்திப்பிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்டது.
ஆனால் அந்த சாலைகள் அகலப்படுத்தப்பட்டதற்கான பயன் மக்களை சென்றடையவில்லை. அகலப்படுத்தப்பட்ட இடங்களை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. நகரில் எந்த ஒரு இடத்திலும் நீண்ட பிளாட்பாரத்தை பார்க்க முடிவதில்லை.
குறிப்பாக சாலைகளில் மரங்கள் இருந்தால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. அதன் நிழலிலேயே சாலையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகளை போட்டு யாரைப்பற்றியும் கவலைப்படாமல் வியாபாரம் செய்கின்றனர்.
அந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டால்கூட வண்டிகளை சிறிது கூட நகர்த்தாமல் செல்போனை பார்த்தபடி உள்ளனர். குறிப்பாக நோ பார்க்கிங் என்று பலகை இருக்கும் பகுதியிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது என்பது அங்கீகரிக்கப்பட்டதாகவே மாறிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு சிலரது செயல்பாடுகள் உள்ளன.
100 அடிரோடு என்றாலே வாகனங்கள் அதிவேகமாக செல்வதற்காக அமைக்கப்பட்டதாகும். ஆனால் புதுவையில் 100 அடி ரோட்டில் அதிவேகமாக செல்வது என்பது இயலாத காரியமாகும். இந்த சாலையோரம் கார், பஸ், லாரி என வாகனங்கள் நாள் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மதுபான கடைகள் முன்பு மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கில் மதுப்பிரியர்கள் கூடி போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை தருவதற்காக ஏராளமான தள்ளுவண்டி கடைகளும் ரோட்டிலேயே வியாபாரத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிம்மதி இழக்கும் நிலை
முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்கள் திரும்ப முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் கடை வைத்திருக்கும் அவலமும் புதுச்சேரியில் சமீப காலமாக அரங்கேறி வருகிறது. ஒரு சிலரின் பிழைப்புக்காக ஒட்டுமொத்த மக்களும் இப்போது புதுச்சேரியில் நிம்மதி இழக்கும் நிலை உருவாகி வருகிறது. இதற்கு ஒருசில அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களும் உறுதுணையாக இருந்து வருகின்றன.
இத்தகைய செயல்களை பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள் நாள்தோறும் கண்டும் காணாமல் செல்கின்றனர். ஆனால் மக்கள் குறைதீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வரவில்லை.
மக்கள் அதிருப்தி
சாலைகளில் சிரமத்துடன் செல்லும் மக்களின் நலன் பற்றி அவர்கள் சிறிதளவுகூட சிந்தித்ததாக தெரியவில்லை. சாலை ஆக்கிரமிப்பாளர்களால் தங்களுக்கு என்ன லாபம் என்பதையே அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இப்படியே போனால் புதுச்சேரிக்கு வீதி அழகு என்ற பெயர் மறைந்துபோகும் என்பதில் சந்தேகமே இல்லை.

Related Articles

Back to top button
Close
Close