fbpx
Others

சிவாஜிக்கும்,கண்ணதாசனுக்கும் சண்டை தீர்த்து வைத்த என்.எஸ்.கே,

கவிஞர் கண்ணதாசன் அப்போது ‘தென்றல் திரை’ என்ற பத்திரிகையில் சினிமா தொடர்பான கட்டுரைகளை எழுதி வந்தார்.   சிவாஜி நடித்த ‘தெனாலி ராமன்‘ என்ற படத்தின் ஒரு காட்சியை நக்கலடித்து அந்தப்படத்தின் போட்டோவைப் போட்டு, ‘சிவாஜி கணேசா…இதுதான் உன் எதிர்காலமா?’ என குழிக்குள் புதைந்திருக்கும் சிவாஜியை வைத்து நக்கலடித்திருந்தார் கண்ணதாசன். அவ்வளவுதான் கண்ணதாசனை அடிக்கத் தயாராக இருந்தார் சிவாஜி.  ‘அவனை நேர்ல பார்த்தா ஒரே அடி…மூஞ்சி முகரையைப் பேர்க்கணும்!’ என வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருந்தார்.    வாஹினி ஸ்டூடியோவில் எதேச்சையாக கவிஞரை நேரில் பார்த்துவிட்டார் சிவாஜி.’கொப்புரானே…இருடா!’ என அடிக்கத் துரத்த, கவிஞர் ஓடினார்.நல்லவேளையாக என்.எஸ்.கே நடித்துக் கொண்டிருந்த செட்டுக்குள் ஓடியிருக்கிறார். இரண்டு பேரின் ஓட்டத்தைப் பார்த்த சீனியரான என்.எஸ்.கே, ‘டேய் இங்கே வாங்கடா…என்னங்கடா பிரச்னை?’ என்று கூப்பிட்டு கேட்டிருக்கிறார். .’அண்ணே…கட்சிக்குள்ள ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கலாம்…அதுக்காக ‘புதைஞ்சுபோ’னு எழுதுறது என்னண்ணே நியாயம்?’ என சிவாஜி நியாயம் கேட்டிருக்கிறார்.  ‘பத்திரிகையில எழுதுனா உன் மதிப்பு போயிடுமா…உனக்கு தன்னம்பிக்கை இல்லையா..? விட்டுக்கொடுத்து போ கணேசா!’ என அறிவுரை சொல்லியிருக்கிறார் என்.எஸ்.கே. சமாதானமாகி கிளம்பிச் சென்றார்சிவாஜி .அவர்போனதும் கவிஞரை அழைத்த என்.எஸ்.கே, ‘நேரடியா ஈடுபடலைனாலும் நானும் திமுககாரன் தான்பா…கொள்கை பிடிக்கலைனா நாசூக்கா அவனே ரசிக்கிற மாதிரி திட்டு… சொல்லு! யாரையும் இப்படி சபிக்காதே தம்பி!’ என்று அறிவுரை சொல்ல தலையாட்டி கேட்டுக் கொண்டார் கவிஞர். அதன்பிறகு யாரைப்பற்றியும் கடைசிவரை காட்டமாக விமர்சிக்கவே இல்லை.  இந்த சண்டையின் காரணமாக சிவாஜியின் ஆரம்ப காலப் படங்களுக்கு கண்ணதாசனை யாரும் கூப்பிட்டதே இல்லை. சிவாஜி என்ன நினைப்பார் என விட்டுவிடுவார்கள். இதனாலேயே கவிஞரும் சிவாஜி இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தது இல்லை.பீம்சிங் பிரபல இயக்குநராக வளர்ந்து வந்த சமயம் ‘பதிபக்தி’ என்ற சிவாஜி- ஜெமினி கணேசன் நடிக்கும் படத்துக்கு கண்ணதாசனை பாடல் எழுத வைக்கலாம் என பிரயாசைப்பட்டார் அவர். ஆனால், சிவாஜி கோபக்காரர் என நினைத்து கடைசியில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை பாடல் எழுத வைத்தார்.பீம்சிங்கின் அடுத்த படமான ‘பாகப்பிரிவினை’யிலாவது இந்த ஜோடியை சேர்க்கலாம் என்ற யோசனையில் இருந்தபோது, அந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கவிஞரின் உதவியாளரும் அவரின் அண்ணன் மகனுமான பஞ்சு அருணாச்சலம் மெதுவாக பேசி கவிஞரின் சம்மதத்தை அரைகுறையாக வாங்கினார்.’நான் எழுதிருவேன் டா…சிவாஜி ஏதாவது சொல்லி அந்தப் பாட்டை படத்துல இருந்து தூக்கிட்டா எனக்கு அசிங்கமா போயிரும்டா… அதான் யோசிக்கிறேன்!’ என்றார்.சிவாஜி என்ன நினைத்தாரோ பாதிப்பாட்டு கண்ணதாசனும் மீதியை பட்டுக்கோட்டையாரும் எழுதிக்கட்டும்னு ஓகே சொல்ல, ‘ஏன் பிறந்தாய் மகனே..’,  ‘தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ..’, ‘தாழையாம் பூ முடிச்சு…தடம் பார்த்து நடை நடந்து..’ ஆகிய மூன்று பாடல்களை எழுதிக் கொடுத்தார். எம்.எஸ்.வி இசையோடு மூன்று பாடல்களையும் கேட்ட சிவாஜி, ‘யாருடா இவன்…இப்படி எழுதுறான்…கோபம்லாம் போச்சுடா!’ என்று மெல்லிசை மன்னரிடம்வியந்திருக்கிறார்.  பட்டுக்கோட்டையாரும் திடீரென மறைந்ததால் மொத்தப் பாடல்களையும் கவிஞர் எழுத வேண்டிய சூழல். அனைத்தும் ஹிட். அடுத்த படமான ‘பாசமலர்’ படத்துக்கும் கவிஞரை புக் செய்தனர். அந்தப் படத்தின் பாடல்களை ரிக்கார்டிங்கில் கேட்ட சிவாஜி தன் வீட்டுக்கு உடனே வரச் சொல்லி கவிஞருக்கு கார் அனுப்பினார்.கவிஞரைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடித்த சிவாஜி, ‘கவிஞன் டா நீ…சரஸ்வதி உன் நாக்குல விளையாடுறாடா..!’ என கேவிக்கேவி அழ, ‘நீ என்னை மன்னிச்சிடு!’ என கவிஞர் கட்டிப்பிடித்து அழ….அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி சமாதானம் சொல்லிக் கொண்டனர்.

கிளம்பும்போது, ‘இனி நாம பிரியவே கூடாது!’ என சாப்பிட்டுக்கொண்டே அன்னத்தில் கைவைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு கடைசிவரை சிவாஜிக்கென தனி ராஜபாட்டையை தன் எழுத்தில் அமைத்துக் கொடுத்தார் கவியரசர்!

Related Articles

Back to top button
Close
Close