fbpx
Others

கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார்.

kallalagar-2022-04-14

மதுரை: உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா களைகட்டியுள்ளது. மதுரை மூன்று மாவடியில் இன்று கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் லட்சக்கணக்காக திரண்டுள்ள பக்தர்களின் கூட்டத்திற்கு மத்தியில் கள்ளழகர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்று மதுரையை அடுத்த அழகர்கோவில் ஆகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.  இந்த சித்திரை திருவிழா நேற்று 14-ம் தேதி தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது.சித்திரை பெருந்திருவிழா தொடர் முன்னோட்ட நிகழ்ச்சியாக கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடந்தது. மேலும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர்கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனம் மற்றும் தசாவதார நிகழ்வின் போது கள்ளழகர் எழுந்தருளும் கருட, சேஷ வாகனங்கள் பாதுகாப்பாக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு முன்னதாக கொண்டு வரப்பட்டன.

நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடானார். முன்னதாக வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதைத் தொடர்ந்து இன்று 15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாவடியில் கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று உபசரிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவில் வந்தடையும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அன்றிரவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றியபடி கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கள்ளழகர்  தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் வந்தடைகிறார். அதை தொடர்ந்து நாளை 16-ம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் கள்ளழகர் கோரிப்பாளையம் வழியாக மதுரை வைகை ஆற்றை அடைகிறார். அன்று காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரோகரா கோஷத்துடன் கள்ளழகரை தரிசிப்பர்கள்.

Related Articles

Back to top button
Close
Close