fbpx
Others

இரட்டை இலை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் நேற்று ஆஜர்

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற--வழக்கு

 கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. பிளவுபட்டது. கட்சியின் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்தது.
அப்போது சசிகலா தரப்பிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சப்பணமாக ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தற்போதைய அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்தநிலையில் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்காக அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் டி.டி.வி.தினகரனுக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில் 8-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. அதற்கு உரிய காரணத்தை குறிப்பிட்டு 12-ந் தேதி (நேற்று) ஆஜராவதாக தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே அமலாக்க பிரிவு அதிகாரிகள், டெல்லி திகார் சிறையில் இருந்த சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பண பரிமாற்றம் தொடர்பான பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே கேட்டுக்கொண்ட காலஅவகாசத்தின்படி, டி.டி.வி.தினகரன் நேற்று காலை 11 மணி அளவில் டெல்லி ஜன்பத் ரோட்டில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
சுகேஷ் சந்திரசேகரும் ஏற்கனவே அமலாக்க பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் இருப்பதால் இருவரிடமும் மாறிமாறி விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை நேற்று இரவு 9 மணிக்கு பிறகும் தொடர்ந்தது. 10 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்த விசாரணையால் அமலாக்க பிரிவு அலுவலகம் முன் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
இந்நிலையில் 10 மணி நேர அமலாக்கத்துறையின்  விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் , “இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி. இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது. அது யார் என்பது தெரியவில்லை. சுகேஷ் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்

Related Articles

Back to top button
Close
Close