fbpx
Others

இந்தியா கூட்டணி பாஜ நேரடி மோதல்:உபி, ஜார்க்கண்ட் இடைதேர்தல்.

 உபி, ஜார்க்கண்ட் சட்ட பேரவை இடைதேர்தலில் பாஜவுக்கும்- எதிர்க்கட்சி இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்க 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் பெரிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் கடந்த 1ம் தேதி மும்பையில் நடந்தது. இதில், மக்களவை தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. இந்நிலையில், உபியில் உள்ள கோசி சட்டபேரவை தொகுதியில் நாளை இடைதேர்தல் நடக்கிறது.கடந்த ஆண்டு பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தாராசிங் சவுகான் திடீரென எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜவில் சேர்ந்தார். தற்போது இடைதேர்தலில் பாஜ சார்பில் தாராசிங் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி சார்பில் முன்னாள் எம்எல்ஏ சுதாகர் சிங் நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. சமாஜ்வாடி கட்சிக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ.(மாவோயிஸ்ட் லெனினிஸ்ட்) ,ஆர்எல்டி, அப்னா தளம்(கமேராவாடி), ஆம் ஆத்மி போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க் கட்சி தலைவர்களும் சமாஜ்வாடி வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம்செய்தனர். இந்தியா கூட்டணி அமைந்த பிறகு நடக்கும் முதல் இடைதேர்தல் என்பதால் கோசி தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் கோசி தொகுதி இடைதேர்தல் பாஜவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் , தும்ரி பேரவை தொகுதி இடைதேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இந்தியா கூட்டணி- பாஜ கூட்டணிகள் நேரடியாக மோதும் தும்ரியில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெகர்நாத் மகட்டோவின் மனைவி பேபி தேவி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) சார்பில் போட்டியிடுகிறார். பாஜ கூட்டணியில் உள்ள ஏஜேஎஸ்யுவை சேர்ந்த யசோதா தேவி அவருக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முதல் இந்த தொகுதி ஜேஎம்எம் வசம் உள்ளது. மேற்கு வங்கத்தில் மும்முனை: உபி இடைதேர்தலில், சமாஜ்வாடி கட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் துப்குரி சட்டமன்ற இடைதேர்தலில் பாஜவுக்கு எதிராக காங், மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் ஒரு அணியாகவும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனியாகவும் போட்டியிடுகின்றன. இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த பிஷ்ணுபாடா ராய் மரணமடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதியில் இடைதேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கு வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனிடையே, துப்குரி தொகுதியில் முன்பு எம்எல்ஏவாக இருந்த மிட்டாலி ராய் திரிணாமுலில் இருந்து விலகி நேற்று பாஜவில் சேர்ந்தார்.

Related Articles

Back to top button
Close
Close